காங்கிரஸ் ஊழல்களை அம்பலப்படுத்திய ‛ஜவான்’.. ஷாருக்கான் படத்துக்கு நன்றி சொன்ன பாஜக! பின்னணி
டெல்லி: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி உள்ள ‛ஜவான்' திரைப்படத்துக்கு திடீரென பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. அதோடு மத்தியில் ஆண்ட முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல், முறைகேடு பற்றி ‛ஜவான்' திரைப்படம் பேசியிருப்பதாக புகழ்ந்து தள்ளியுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான். இந்த திரைப்படம் கடந்த 8 ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படத்தில் தந்தை - மகன் என கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் என்பது பல்வேறு பிரச்சனைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ள வரலாறு உள்ளது.
அதாவது வங்கி கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்தல், அரசு மருத்துவனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழப்பு, ஆயுத கொள்முதல் ஊழல், மக்களுக்கு பிரச்சனைகள் தரும் தொழிற்சாலைகளை பெரிய நிறுவனங்களுக்குடன் அரசியல் தலைவர்கள் ஒப்பந்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாஜக சார்பில் திடீரென ‛ஜவான்' திரைப்படத்துக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜவான் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரச்சனைகள் என்பது 2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை நினைவுப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛ஜவான் திரைப்படத்தின் மூலம் 2004 முதல் 2014 வரை ஊழல், கொள்கைகளை முடக்குதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை நினைவுப்படுத்தியதற்கு நன்றி. இந்த 10 ஆண்டின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடந்த கால சோகமான அரசியலை இது நினைவுப்படுத்துகிறது. காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல் என ஊழல் மலிந்து முந்தைய காங்கிரஸ் அரசு இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊழலற்ற அரசாக, தூய்மையான ஆட்சி நிர்வாகத்தை வழங்கும் அரசாக 9 ஆண்டுகளை கடந்தும் செயல்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மை, நேர்மையான ஆட்சியை வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி எடுத்துள்ளது.
காங்கிரஸ் காலத்தில் 1.6 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்தி உள்ளது. அதோடு பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2.55 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கடன் செலுத்தாத நண்பர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. தப்பியோடிய விஜய் மல்லையா, முந்தைய கடனை கூட திருப்பி செலுத்தாமல் மேலும் கடனை நீட்டித்ததற்காக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் ராணுவத்தின் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறையுடன் இருக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு 2.3 லட்சம் குண்டு துளைக்காத உடைகளை மோடி அரசு வழங்கி இருக்கிறது. ஒரு ரேங்க்- ஒரே பென்ஷன் திட்டத்துக்காக 1.2 லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு வழங்கியுள்ளது. ராணுவத்தை வலுப்படுத்த ரபேல், அபாச்சி, ச்சினூக் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த கால ஆட்சியில் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதலுக்கு உடனுக்குடன் பதிலடியை மோடி அரசு கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பாலாகோட் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், மும்பை தாக்குதல் நடந்தபோது அதற்கு பதிலடி கொடுக்க துல்லிய தாக்குதல் நடத்த ராணுவம் அனுமதி கோரியபோது அதற்கு அப்போதைய அரசு அனுமதி மறுத்தது'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications