அப்துல் கலாமுக்கு இல்லை.. வாஜ்பாய்க்கு குடியரசு தலைவர் பதவி.. பாஜக உருட்டிய பகடை.. வெளியான உண்மை
2002ஆம் ஆண்டு, 11வது குடியரசுத் தலைவர் தேர்தலின்போது, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு பதிலாக, அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயை, குடியரசுத் தலைவர் பதவி ஏற்க பாஜக வலியுறுத்தியதாக, வாஜ்பாயின் நெருங்கிய உதவியாளர் அசோக் டண்டன் தனது 'அடல் சம்ஸ்மரன்’ புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
“ராஷ்டிரபதி பவனுக்கு செல்லுங்கள், பிரதமர் பதவியை அத்வானியிடம் ஒப்படையுங்கள்” என்று பாஜக, வாஜ்பாயிடம் முன்மொழிந்துள்ளது. எனினும், வாஜ்பாய் இதை திட்டவட்டமாக நிராகரித்தார். “நான் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கவில்லை. ஆதரிக்கவும் மாட்டேன்” என்று அவர் கூறியதாக டண்டன் குறிப்பிட்டுள்ளார்.

வாஜ்பாயின் ஊடக ஆலோசகராக 1998 முதல் 2004 வரை பணியாற்றிய அசோக் டண்டன் எழுதிய 'அடல் சம்ஸ்மரன்’ புத்தகம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் வெளியானது. வாஜ்பாய் 1999 முதல் 2004 வரை, ஐந்தாண்டு முழு பதவிக்காலத்தை நிறைவு செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாய் மறுத்த பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 2002 தேர்தலில் டாக்டர் கலாமை தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. காங்கிரஸ் ஆதரவு பெற்ற லட்சுமி சாகல், கலாமுக்கு எதிராகப் போட்டியிட்டாலும், காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகளும் கலாமுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஜூலை 25, 2002 அன்று, டாக்டர் கலாம் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
11வது குடியரசுத் தலைவர் பதவியை ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என வாஜ்பாய் விரும்பினார். இதற்காக, காங்கிரஸின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
இச்சந்திப்பில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை NDA தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக வாஜ்பாய் முதல் முறையாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்ததும் கூட்டத்தில் சிறிது நேரம் மௌனம் நிலவியதாக டண்டன் குறிப்பிட்டுள்ளார்.

மவுனத்தைக் கலைத்த சோனியா காந்தி, வாஜ்பாயிடம், “கலாம் பெயரைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும், இதை பரிசீலிப்பதைத் தவிர வேறு வழியில்லை. உங்கள் முன்மொழிவைப் பற்றி நாங்கள் விவாதித்து ஒரு முடிவை எடுப்போம்” என்று கூறியதாக அசோக் டண்டன் எழுதியுள்ளார்.
அசோக் டண்டன் தனது புத்தகத்தில் வாஜ்பாய் மற்றும் அத்வானி இடையேயான உறவையும் விவரித்துள்ளார். இரு தலைவர்களிடையேயான கொள்கை வேறுபாடுகள் இருந்தும், அவர்களது உறவு ஒருபோதும் மோசமடையவில்லை என்று டண்டன் குறிப்பிட்டுள்ளார்.
அத்வானி எப்போதும் வாஜ்பாயை தனது தலைவராகவும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் கருதினார். வாஜ்பாய் அத்வானியை தனது 'இளகாத துணை’ (அடல் சாத்தி) என்று அழைத்தார். இவர்களது கூட்டு இந்திய அரசியலில் ஒத்துழைப்பு மற்றும் சமநிலையின் அடையாளமாகத் திகழ்ந்தது. இருவரும் பாஜகவை கட்டமைத்து, கட்சிக்கும் அரசுக்கும் புதிய திசையை வழங்கினர் என்று அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 டிசம்பர் 13 அன்று நடந்த நாடாளுமன்ற தாக்குதலைப் பற்றியும் டண்டன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் வாஜ்பாய்க்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. தாக்குதல் நடந்தபோது, வாஜ்பாய் தனது வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
தாக்குதலின்போது வாஜ்பாய்க்கு சோனியா காந்தியிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், “உங்கள் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன்” என்று சோனியா காந்தி கூறியதாகவும் டண்டன் எழுதியுள்ளார். இதற்கு பதிலளித்த வாஜ்பாய், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நீங்கள் (சோனியா காந்தி) நாடாளுமன்றத்தில் இருக்கிறீர்களோ என்று நான் கவலைப்பட்டேன். உங்களை கவனித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications