உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பிஆர் கவாய்! மே 14ம் தேதி பதவியேற்பு
டெல்லி: தற்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் மே 13ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்கிறார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இருக்கிறார். அவரது பதவிக்காலம் மே 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து இப்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி
சட்டத்துறை அமைச்சகம் புதிய தலைமை நீதிபதி குறித்து பரிந்துரையைத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் கோரியிருந்தது. இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக கவாயை நியமிக்க மத்திய அரசுக்குத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரை அளித்துள்ளார். இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திற்குத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது பரிந்துரையை அளித்துள்ளார். சஞ்சீவ் கண்ணா மே 13ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், அதற்கு மறுநாள் மே 14ம் தேதி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்பார்.
ஆறு மாதங்கள் மட்டுமே
இருப்பினும், நீதிபதி கவாய் அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். வரும் நவம்பரில் கவாய் ஓய்வு பெறும் நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்கு அவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பார். 2007ஆம் ஆண்டு நாட்டின் தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் இவர் ஆவார்.
யார் இந்த நீதிபதி கவாய்
நீதிபதி கவாய் மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1960ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பிறந்தார். சமூக ஆர்வலரும் முன்னாள் கேரள மற்றும் பீகார் மாநில ஆளுநரான ஆர்.எஸ்.கவாயின் மகன்தான் இந்த பிஆர் கவாய்.
இவர் கடந்த 1985ஆம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்தார். மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராக இருந்த அவர், பிறகு மகாராஷ்டிர ஐகோர்ட் நீதிபதியாகவும் பணியாற்றினார். அதாவது 1987 முதல் 1990 வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார். அதன் பிறகு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான விஷயங்களில் பிரதானமாக ஆஜரானார்..
கடந்து வந்த பாதை
இதையடுத்து ஆகஸ்ட் 1992இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டில் நாக்பூர் பெஞ்சில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நீதிபதி கவாய் 2003இல் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005 இல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2019இல் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு நீதிபதி கவாய் பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பு வழங்கிய அமர்வில் நீதிபதி கவாய் இடம்பெற்றிருந்தார்.












Click it and Unblock the Notifications