பச்சை தங்கம் vs பனிக்கரடி! இந்தியா உஷாராக வேண்டிய நேரம் இது!
டெல்லி: சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர, பிரிக்ஸ் கரன்சியை ரஷ்யா யோசித்து வருகிறது. இது இந்தியாவுக்கு மிகுந்த பலன் கொடுக்கும். ஆனால், இதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகவும், எனவே இந்தியா கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பச்சை தங்கம்: பச்சை தங்கம் என்று அமெரிக்க டாலர் தான் அழைக்கப்படுகிறது. அதாவது உலகம் முழுவதும் வணிக வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் இன்றியமையாததாக இருக்கிறது. உதாரணத்துக்கு பக்கத்து நாட்டில் உள்ள பொருட்களை நீங்கள் வாங்க வேண்டும் எனில் அதை டாலரில் தான் வாங்க வேண்டும். அதேபோல, அந்த நாட்டில் இருந்தும் நம்மிடம் பொருட்களை வாங்க வேண்டும் எனில் அந்த வர்த்தகமும் டாலரில்தான் நடைபெறும்.

இதெல்லாம் மற்ற மூன்றாவது நாடுகளுக்கான விதி. ஆனால் அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் வெறும் டாலரை அதாவது பச்சை காகிதத்தை அச்சடிப்பதன் மூலம் உலகில் எந்த நாட்டில் உள்ள வளங்களை வேண்டுமானாலும் அவர்களால் வாங்கிவிட முடியும். எனவேதான் டாலர் பச்சை தங்கம் என்று அழைக்கப்படுகிறது.
பனிக்கரடி: இந்த டாலருக்கு இப்போது வரை சிம்ம சொப்பனமாக இருப்பது ரஷ்யாதான். ரஷ்ய அதிபர் புதின், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புபை வைத்து டாலருக்கு எதிரான கரன்சியை உருவாக்க திட்டமிட்டார். ரஷ்யாவின் அடையாளமாக பனிக்கரடி விளங்குவதால், பச்சை தங்கத்தை வீழ்த்தும் இடத்தில் ரஷ்யாவின் பனிக்கரடி இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் ரஷ்யாவுக்கே டாலர் தண்ணி காட்டிவிட்டது. அதாவது ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதார தடை மூலம் அந்நாட்டில் டாலர் புழக்கம் குறைந்தது. ஆனாலும், எண்ணெய் விற்பனையை கொண்டு, சொந்த கரன்சியால் ரஷ்யா பிழைத்துக்கொண்டது.
இந்தியாவின் நடவடிக்கை: இப்படியாக இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பொருளாதார போட்டி காரணமாக நிச்சயம் பிரிக்ஸ் கரன்சி போன்ற மூன்றாவது ஒரு கரன்சி உருவாகும். இதை அமெரிக்க நிதியமைச்சர் ஜெனட் யெல்லன் சமீபத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் பணம் இந்தியாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு உதவி செய்யும். எப்படியெனில், பிரிக்ஸ் கரன்சி வந்துவிட்டால், டாலர் குறிப்பிட்ட அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே டாலரின் மதிப்பு குறைந்துவிடும். மறுபுறம் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க தொடங்கும்.
காத்திருக்கும் ஆபத்து: என்னதான் பிரிக்ஸ் கரன்சி உருவானாலும் கூட, அது இரண்டாவது டாலராக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது அனைத்து வர்த்தகத்தையும் பிரிக்ஸ் கரன்சியை கொண்டே செய்ய கூடாது. இந்த நடைமுறையை மெயின்டெயின் செய்தாலே பிரிக்ஸ் கரன்சியின் ஆதிக்கத்தை தடுத்துவிடலாம். இதுதான் இந்தியா செய்ய வேண்டிய வேலை. அதற்கேற்ப பொருளாதார திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கை: டாலருக்கு மாற்றான கரன்சியை நோக்கி போகமாட்டோம் என்று இந்தியா கூறியிருக்கிறது. ஆனால் மாற்று கரன்சியை இந்தியாவுக்கு தேவை என்பதால், என்றாவது ஒருநாள் நாம் நிச்சயம் அதற்கான நடவடிக்கையில் இறங்குவோம், அந்த நேரத்தில் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும். அதாவது இந்தியாவில் டாலர் கையிருப்பை குறைக்கும். இது பல வகையில் இந்தியாவை பாதிக்கும். இலங்கை போன்று நெருக்கடி ஏற்பட கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்தியா இந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications