ஆப்கானில் அமைதி திரும்ப வேண்டும்.. டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட பிரிக்ஸ்.. மாநாட்டில் முடிவு
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் பிரகடனம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இந்தியா அடுத்தடுத்த சர்வதேச மீட்டிங்குகளில் கலந்து கொண்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் இன்று இந்தியாவிற்கு வந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவர் முக்கியமான ஆலோசனைகளை டெல்லியில் மேற்கொண்டார். அதே நாளில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் இயக்குனர் நிக்கோலாய் பாட்ருசேவ் இன்று அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தினார்.தாலிபான்களின் வெற்றி குறித்தும், புதிய அமைச்சரவை குறித்தும் இதில் பேசப்பட்டது.
தாலிபான் குறித்து விவாதிக்க, பிரதமர் மோடி செப்டம்பர் 16ம் தேதி எஸ்சிஓ மீட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த ஷாங்காய் கோஆப்பரேஷன் மீட்டிங் தாலிபான் வெற்றிக்கு இடையே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் பிரதமர் மோடி குவாட் ஆலோசனையில் செப்டம்பர் 24 கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது.

பிரிக்ஸ்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் ஆகும். ஆப்கானிஸ்தானில் தாலிபான் வென்ற நிலையில் நேற்று இவர்களின் 13வது கூட்டம் ஆன்லைன் வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக பிரதமர் மோடி, ரஷ்யா சார்பாக அந்நாட்டு அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின் பிங், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சான்ட்ரா, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டனம்
இந்த கூட்டத்தில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 190 பேர் வரை பலியான இந்த குண்டுவெடிப்பிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும், அங்கு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் பிரகடனம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி பிரகடனம்
இந்த மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த அமைதிக்கான டெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மாற்றங்களை கவனித்து வருகிறோம். அங்கு வன்முறைகள், ஆயுத அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அங்கு சூழ்நிலை அமைதியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து தரப்பையும் உட்படுத்திய ஆப்கான் அரசு அமைய வேண்டும். இதற்காக அனைத்து தரப்பையும் உட்படுத்திய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

பேச்சுவார்த்தை
சட்டம், ஒழுங்கு, மக்கள் பாதுகாப்பு அனைத்தும் ஆப்கானிஸ்தானில் காக்கப்பட வேண்டும் என்று இந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் இந்தியா முன்மொழிந்த டெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு வகையில் இந்தியாவிற்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த மாநாட்டில் தாலிபான்களுக்கு எதிராக எந்த விதமான கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. அல்லது அங்கு அமைய உள்ள தாலிபான் அரசு குறித்தும் கடுமையான வாக்கியங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தானில் நடக்கும் மாற்றங்கள் அண்டை நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அங்கு போதை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது, தீவிரவாதம் ஆகியவற்றால் அண்டை நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் தீர்மானத்தில், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் கட்டுப்படுத்த வேண்டும், அண்டை நாடுகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். ஆப்கானை புகலிடமாக கொண்டு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட அனுமதிக்க கூடாது.
Recommended Video

பெண்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அங்கு மனித உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். ஆப்கான் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமைகள் உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும், என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யாவும் இதே கருத்துக்களை தெரிவித்தாலும், வலுவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசை சீனா, ரஷ்யா ஏற்றுக்கொண்டு விட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications