புதின் டூ ஜின்பிங் வரை.. டெல்லியில் குவியும் தலைகள்! பிரிக்ஸ் மாநாட்டிற்கு முன் மோடி போட்ட போஸ்ட்
டெல்லி: 2026ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்த உள்ளது. இந்த உச்சி மாநாடு நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வருகை புரிந்துள்ள நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் விரைவில் வர உள்ளார். இந்நிலையில் தான் பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நம்பிக்கையுடன் முக்கிய போஸ்ட்ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாடு 2026-யை நம் நாடு தலைமையேற்று நடத்த உள்ளது. இந்த உச்சி மாநாடு நாளை தொடங்கி நாளை மறுநாள் வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. உலக தலைவர்களின் வருகையையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்துவிட்டார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தாக் எல்-சிசி, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஐக்கிய அரபு அமீரகத்தின் இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது அலி மற்றும் வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் தான் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய பதிவு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதில் ''அடுத்த சில நாட்களில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உலகம் முழுவதும் இருந்தும் தலைவர்கள் ஒன்று கூடுவார்கள். உலகத்தின் நலனை முன்னிறுத்தி பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள விவாதங்கள் இந்த மாநாட்டில் நடைபெறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.
நாளை தொடங்கும் இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உணவு, எரிசக்தி, சுகாதாரம், பேரிடர் ஏற்படுவதை குறைத்தல் உள்பட பிற முக்கிய விவகாரங்களை மேம்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி புவிசார் அரசியல் சூழலை கையாள்வதில் நாடுகளுக்கு இடையேயான புரிதலை ஏற்படுத்தவும் நம் நாடு தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications
