கேசிஆர் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி.. திகார் சிறையில் இருந்து அழைத்து சென்ற போலீஸ்! என்னாச்சு
டெல்லி: தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதாவுக்கு டெல்லி திகார் சிறையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ். இவர் பிஆர்எஸ் கட்சியின் தலைவராக உள்ளார். தெலுங்கானாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த தேர்தலில் பிஆர்எஸ் கட்சி படுதோல்வியடைந்தது. தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

அன்று முதல் சந்திரசேகர ராவுக்கு தொடர்ந்து அடி விழுந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த மார்ச் 15ம் தேதி அமலாக்கத்துறையால் சந்திரசேகரராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டார். கவிதா தெலுங்கானாவில் எம்எல்சியாக உள்ள நிலையில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த கைதுக்கு முக்கிய காரணம் என்பது டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி கொண்டு வந்த புதிய மதுபான கொள்கை தான் காரணம். இந்த புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியபோது ‛‛சவுத் குரூப்'' என்ற குழுவை சேர்ந்த தொழிலதிபர்களுடன் இணைந்து ஆம்ஆத்மி தலைவர்கள் லாபம் சம்பாதிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.
அதாவது இந்த குழு சார்பில் ரூ.100 கோடி வரை ஆம்ஆத்மி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுக்கு சாதகமாக டெண்டர் வழங்கும் நோக்கில் இந்த பணம் ‛சவுத் குரூப்' தொழிலாளர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்தும் நபராக கவிதா இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ, அமலாக்கத்துறை கவிதாவிடமும் விசாரணை நடத்தியது.
அதன்பிறகு சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைந்தது. அதன்பிறகு அவரை சிபிஐயும் கைது செய்தது. தற்போது கவிதா நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார்.
இத்தகைய சூழலில் தான் இன்று அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் இருந்து டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கவிதாவுக்கு எந்த மாதிரியான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இவர் தற்போது வரை டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தான் கலால்துறை அமைச்சராக இருந்த நிலையில் அவருக்கு ஜாமீன் என்பது கிடைக்காமல் உள்ளது. அதன்பிறகு தான் கவிதா கைது செய்யப்பட்டார்.
மேலும் கவிதா கைது செய்யப்பட்ட அடுத்த 6வது நாளில் அதாவது மார்ச் 21ல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவாலும் தற்போது சிறையில் உள்ளார். கெஜ்ரிவால் உடல் எடை குறைந்து வருவதாகவும், கோமா நிலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் கைதாகி உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதா திகார் சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications