அதானி விவகாரத்தில் தொடரும் எதிர்க்கட்சிகளின் ஆவேசம்.. நாடாளுமன்றம் திங்கள் வரை ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று கூடுகிறது.
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று கூடிய நிலையில், அதானி குழுமம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இன்றும் எழுப்பினர். இதனால் இரு அவைகளும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜன. இறுதியில் தொடங்கும் அதன்படி இந்தாண்டும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த வாரம் அவை தொடங்கியது.
அதேநாளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில் 2023- 2024 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

பட்ஜெட்
மேலும், அதில் பல்வேறு முக்கிய தரவுகளும் இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பிப். 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது.. இந்த பட்ஜெட் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளன. மொத்தம் இரு அமர்வுகளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

வரி உச்சவரம்பு
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், மோடி 2.o அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, பலரும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய வரி முறையில் உள்ளவர்களுக்கு ரூ.7 லட்சம் வரை வரி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமளி
மேலும், இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ஆம் நாள் அமர்வு நேற்று கூடியது. அப்போது குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்தது. இருப்பினும், அவை தொடங்கியது முதலே அதானி குறித்து ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

ஒத்திவைப்பு
பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இரு அவையிலும் எழுப்பின. இதனால் அவையில் அமளி ஏற்பட்ட நிலையில், முதலில் நாடாளுமன்றம் பிற்பகல் வரையிலும் அதன் பின்னர் நாள் முழுக்கவும் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அவை கூடியவுடனே எதிர்க்கட்சிகள் மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பினர். இதனால் இரு அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் முதலில் மக்களவை மதியம் 2 மணி வரையும் மாநிலங்களவை 2.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மதியம் கூடிய போதும் அமளி தொடர்ந்த நிலையில், இரு அவைகளும் வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இன்று நாடாளுமன்றம் கூடும் முன்பு, பாஜக எம்பிக்களுக்கு பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் விளக்கினார். நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாஜக எம்பிகளுக்கு மத்திய அரசின் பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கினார். மேலும், பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களைப் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

இன்றும் அமளி
பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை இரு அவையிலும் எழுப்பின. இதனால் அவையில் அமளி ஏற்பட்ட நிலையில், முதலில் நாடாளுமன்றம் பிற்பகல் வரையிலும் அதன் பின்னர் நாள் முழுக்கவும் இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 4ஆம் நாள் அமர்வு இன்று காலை 11 மணிக்கு கூடியது. அவை கூடியவுடனே எதிர்க்கட்சிகள் மீண்டும் அதானி விவகாரத்தை எழுப்பினர். இதனால் இரு அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மக்களவை மதியம் 2 மணி வரையும் மாநிலங்களவை 2.30 மணி வரையும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications