இனி 4 நாள் வேலை செய்தால்.. 3 நாள் லீவு! பட்ஜெட்டில் வரும் அறிவிப்பு? அப்போ சம்பளம் குறையுமா என்ன?
டெல்லி: மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடங்கிப் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல புதிய தொழிலாளர் சட்டம் தொடர்பான அறிவிப்புகளும் இதில் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டத்தில் 4 நாள் வேலை மற்றும் 3 நாள் விடுமுறை முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்தாண்டு பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் எனத் தெரிகிறது. வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசு:
அதேபோல இந்த பட்ஜெட் உரையில் புதிய தொழிலாளர் சட்டம் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது. அடுத்த நிதியாண்டு முதல் படிப்படியாக இந்த புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தும் திட்டத்தை நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட் உரையில் அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரு நிறுவனங்கள் பல காலமாக வலியுறுத்தி வரும் விஷயங்களைக் கருத்தில் கொண்டு இந்த தொழிலாளர் சட்டங்கள் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் மொத்தம் மூன்று கட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக பல்வேறு சட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாகப் பிரபல ஆங்கில ஊடகமான எகானமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.. 500க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்கள் முதல் ஆண்டில் இருந்தே இந்த சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
3 கட்டங்களாக அமல்:
தொடர்ந்து 100-500 ஊழியர்களைக் கொண்ட நடுத்தர நிறுவனங்கள் இரண்டாம் ஆண்டு முதலும் 100க்கு குறைவான ஊழியர்களைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் மூன்றாம் ஆண்டு முதல் இந்த புதிய தொழிலாளர் சட்டங்களைப் பின்பற்ற வேண்டி இருக்கும். நமது நாட்டில் சுமார் 83% நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கள் பிரிவில் தான் வரும். எனவே, அந்த சிறிய நிறுவனங்கள் புதிய சட்டங்களைப் பின்பற்ற இரண்டு ஆண்டுகள் வரை கால அவகாசம் கிடைக்கும்.
விதிகள் மாற்றப்படும்:
இந்த புதிய தொழிலாளர் சட்டங்களில் தினசரி வேலை செய்யும் நேரம் அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், இப்போது 5 நாட்கள் வேலை, 2 நாள் விடுமுறை என இருக்கும் நிலையில், அதை மாற்றி 4 நாட்கள் வேலை மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற ஆப்ஷனை கொண்டு வரும் வகையில் சட்டங்கள் இருக்கும். வேலை செய்யும் 4 நாட்கள் மட்டும் அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு இது குறித்து எந்தவொரு தகவலையும் பகிரவில்லை.
கேள்வி:
அதேநேரம் வேலை நாட்கள் குறைக்கப்படுவது தொடர்பாகப் பல சந்தேகங்களையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள். அதாவது வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் சம்பளங்களையும் நிறுவனங்கள் குறைக்குமே என்பதே பலரது கவலையாக இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டே மத்திய அரசு விதிகளை வடிவமைக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications