தமிழ்நாட்டின் அரிய வகை வளங்களை சுரண்டப் போகிறார்கள்.. அதுதான் இந்த பட்ஜெட்.. கொந்தளிக்கும் சு.வெ!
டெல்லி: தமிழ்நாட்டின் வளங்களை சுரண்டுவதற்கு தான் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கூறிய சு.வெங்கடேசன், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 2 புதிய ரயில் வழித்தடம், ஆதிச்சநல்லூர் சுற்றுலா மையம், பழவேற்காடில் பறவை கண்காட்சி மையம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கியுள்ள போதும், தமிழ்நாட்டிற்கு என்று எந்தவித சிறப்பு அறிவிப்புகளோ, திட்டங்களையோ மத்திய அரசு வெளியிடவில்லை.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் பேசுகையில், தேர்தல் வருவதால் மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வரும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தலைகீழாக எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக சொல்லப்படும் திறக்குறளும், சங்க இலக்கிய பாடலும் கூட இடம்பெறவில்லை. வஞ்சகம் விளைவிப்பதும் வளங்களை சுரண்டுவதும் தான் இந்த பட்ஜெட்டின் அறிவிப்பு.
ரயில்வே திட்டம், தொழிற்சாலைகள், கட்டமைப்பு தொடர்பாக ஒரு அறிவிப்பு கூட வெளியாகவில்லை. மாறாக அரிய வகை கனிமங்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவிக்கிறார்கள். அரிய வகை கனிமங்களை எடுக்கிற, ஏலம் விடுகிற உரிமம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதனை பறித்து மத்திய அரசின் உரிமமாக மாற்றுவதற்கு சட்டம் இயற்றினார்கள்.
இப்போது தமிழ்நாட்டின் அரிய வகை கனிமங்களை சூறையாட தனியாக வழித்தடம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஆயுர்வேத மருத்துவத்திற்கு 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சித்த மருத்துவம் தொடர்பாக ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கீழடி பற்றி அறிவிப்பு இல்லை. ஏற்கனவே கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி வார்த்தையே இல்லை.
பேரிடர் நிவாரண நிதி, மாநிலங்களுக்கான நிதி ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்கிறார்கள். பீகார், ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. எந்த துறையிலும் ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.
மதம், கலாச்சாரம், வழிபாட்டு தலங்களுக்கு வழிக்காட்ட 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிப்போம் என்கிறார்கள். ஆனால் வரலாறு எந்த வார்த்தையே இல்லை. இவர்கள் நாட்டை வரலாற்றின் பின்பும், அறிவியலின் பின்போ கொண்டு செல்ல தயாராக இல்லை. தங்களின் நம்பிக்கைகளின் பின்னால் அடுத்த தலைமுறையை கொண்டு செல்ல மிகப்பெரிய நிதியை மடைமாற்றம் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications