"புல்டோசர் ஆக்ஷன்.." திடீர் வெள்ளத்தால் டெல்லி ஐஏஎஸ் அகாடமியில் 3 பேர் பலி.. விசாரணையில் திடுக்
டெல்லி: தலைநகர் டெல்லியில் பேஸ்மெண்டில் இயங்கி வந்த ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்ததைக் கண்டித்து மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற டெல்லி அதிகாரிகள் புல்டோசர் நடவடிக்கையை அதிரடியாக எடுத்துள்ளனர். இருப்பினும், இது போதுமான நடவடிக்கை இல்லை என்று மாணவர் அமைப்பினர் கடுமையாகச் சாடியுள்ளனர்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை இரவு பேஸ்மெண்டில் இயங்கி வந்த ஐஏஎஸ் கோச்சிங் சென்டரில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து டெல்லியில் மிகப் பெரியளவில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புல்டோசர் ஆக்ஷன்: இதற்கிடையே அப்பகுதியில் வடிகால்கள் மீதான ஆக்கிரமிப்பை டெல்லி அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர். இந்த ஆக்கிரமிப்புகள் தான் நீர் வடியாமல் இருக்க முக்கிய காரணமாக இருந்ததாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் வடிகால்களைத் தடுக்கும் சிமென்ட் பகுதிகள் புல்டோசர் மூலம் துளையிட்டு அகற்றப்படுகிறது.
பேஸ்மெண்டில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அங்கே மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே 3 பேர் உயிரிழந்ததாகவும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தியும் அவர்கள் போராட்டங்களை நடத்தினர். அதேநேரம் இந்த புல்டோசர் நடவடிக்கையை எல்லாம் ஏற்க முடியாது என்றும் இது மிகவும் தாமதமான ஒன்று என்றும் அவர்கள் சாடியுள்ளனர். மேலும், ஏதோ நடவடிக்கை எடுக்கிறோம் என்பதைக் காட்டவே இதுபோல அவர்கள் செய்துள்ளதாகவும் மாணவர்கள் சாடினர்.
உயிரிழப்பு: டெல்லி ராஜிந்தர் நகரில் உள்ள ராவ்வின் ஐஏஎஸ் படிப்பு மையத்தின் அடித்தளத்தில் சிக்கி 25 வயதுடைய இரண்டு பெண்கள் மற்றும் 28 வயதான இளைஞர் என மொத்தம் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து டெல்லி முழுக்க தீவிர போராட்டங்கள் நடந்து வருகிறது. டெல்லியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர் அமைப்பினர் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலையில், அங்கே பரபர சூழல் ஏற்பட்டுள்ளது.
விதிமீறல்: டெல்லியில் பேஸ்மெண்ட் வாகனங்களை நிறுத்தவும் ஸ்டோரேஜ் ரூமாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், விதிகளை மீறி அங்கே இந்த ஏஐஎஸ் அகாடமியின் நூலகம் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. திடீரென வெள்ளம் ஏற்பட்ட அந்த சனிக்கிழமை மாலை நூலகத்தில் சுமார் 20 மாணவர்கள் இருந்துள்ளனர். கனமழையால் அங்கே வெறும் சில நிமிடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
திடுக் தகவல்கள்: அங்கு அடித்தளத்திற்கு உள்ளே வரவும் வெளியே செல்லவும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்துள்ளது. இதுவும் மாணவர்கள் சீக்கிரம் வெளியே வர முடியாமல் தடுத்துள்ளது. இது மட்டுமின்றி நூலகத்தில் பயோமெட்ரிக் என்டரி முறை இருந்துள்ளது. மழையால் அது முடங்கியதால் மாணவர்கள் உள்ளே சிக்கியதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த 17 பேரைச் சரியான நேரத்தில் மீட்டுள்ளனர். இருப்பினும், மூன்று பேரைச் சரியான நேரத்தில் மீட்க முடியவில்லை. இதனால் இந்த கொடூர சம்பவத்தில் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தோர் தன்யா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டால்வின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
மாணவர்கள் சாடல்: முறையான வடிகால் அமைப்புகள் இல்லாதது.. ஆக்கிரமிப்புகளைத் தடுக்க தவறியது ஆகியவை குறித்து ஏற்கனவே பல முறை நகராட்சி அதிகாரிகளுக்கு எச்சரித்ததாகவும் இருப்பினும், அவர்கள் அலட்சியமாக இருந்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்று கூறும் மாணவர்கள், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications