பாஜகவுக்கு பெரிய அதிர்ச்சி.. 3 மாநில இடைத்தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்த வெற்றி இல்லை!
டெல்லி: சமீபத்தில் தான் நாடு முழுக்க நீட் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் பாஜகவுக்கு எதிராக இருந்த நிலையில், 3 பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. பீகாரின் பாங்கிபூர், மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா மற்றும் குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் குஜராத்தில் மட்டுமே பாஜக வென்றுள்ளது.
இன்றைய தினம் பீகாரின் பாங்கிபூர், மத்தியப் பிரதேசத்தின் டாட்டியா மற்றும் குஜராத்தின் மஞ்சல்பூர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மாணவர் போராட்டத்திற்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதாலும் இது பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல் என்பதாலும் இது தேசியளவில் கவனம் ஈர்த்துள்ளது.

பாங்கிபூர்: பிரசாந்த் கிஷோர் வெற்றி
பீகாரின் பாங்கிபூர் தொகுதி நீண்ட காலமாக பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இந்த தொகுதியில் இதுவரை பாஜக வேட்பாளர் தோல்வி அடைந்ததே இல்லை. சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நிதின் நபின் ராஜ்யசபாவுக்கு தேர்வான நிலையில், அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் நேரடியாக களமிறங்கியதால் தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. முதலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட அபிஷேக் குமார் சின்ஹா, வேட்புமனு தாக்கல் செய்த மறுநாளே தனிப்பட்ட காரணங்கள் என சொல்லி கூறி போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து பாஜக இளைஞர் அணி நிர்வாகி நீரஜ் குமார் சின்ஹாவை புதிய வேட்பாளராக களமிறக்கியது. இந்தத் தொகுதியில் சுமார் 18,900 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றுள்ளார்.
டாட்டியா: கடும் போட்டி
மத்திய பிரதேசத்தின் டாட்டியா தொகுதியில், காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர பாரதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு பாஜக சார்பில் அஷுதோஷ் திவாரியும், காங்கிரஸ் வேட்பாளர் குன்வர் கன்ஷ்யாம் சிங்கும் நேருக்கு நேர் மோதினர்.
மத்திய பிரதேசத்தின் முக்கிய அமைச்சரான நரோத்தம் மிஸ்ராவின் செல்வாக்கு மிக்க தொகுதியாக டாட்டியா இருந்தது. கடந்த 2008 முதல் 2018 வரை தொடர்ச்சியாக அங்கு நரோத்தம் மிஸ்ரா வென்றிருந்தார். இருப்பினும், கடைசியாக நடந்த 2023 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வி அடைந்திருந்தார். இதனால் இடைத்தேர்தலில் பாஜக அவருக்கு பதிலாக அஷுதோஷ் திவாரிக்கு வாய்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிஸ்ரா ஆதரவாளர்கள் போராட்டத்தில் எல்லாம் ஈடுபட்டிருந்தனர். இந்த தொகுதியில் காலை முதலே கடும் போட்டி இருந்த நிலையில், சுமார் 6000 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
மஞ்சல்பூர்: குஜராத்தில் பாஜக
குஜராத்தின் மஞ்சல்பூர் தொகுதியில், தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த பாஜக தலைவர் யோகேஷ்பாய் நரந்தாஸ் படேல் மறைவால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் வடோதரா மாநகராட்சி கவுன்சிலர் சதீஷ் கோவிந்த்பாய் படேலும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் குஜராத் காங்கிரஸ் துணை தலைவர் பிகாபாய் ரபாரியும் போட்டியிட்டனர்.
2022 சட்டசபைத் தேர்தலில் 182 தொகுதிகளில் 156 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்த தொகுதியையும் தக்க வைத்தது. இருப்பினும், கடந்த முறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வென்றிருந்த நிலையில், இந்த முறை வாக்கு வித்தியாசம் சுமார் 30 ஆயிரமாக குறைந்துள்ளது.
மாணவர் போராட்டங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.


Click it and Unblock the Notifications
