நாட்டிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலம் எது தெரியுமா? லிஸ்டில் தமிழ்நாடு எங்கே? வெளியான ரிப்போர்ட்
டெல்லி: இந்திய மாநிலங்களின் பொதுக்கடன்கள் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2013-14 நிதியாண்டில் ₹17.57 லட்சம் கோடியாக இருந்த இந்தக் கடன், 2022-23 நிதியாண்டில் ₹59.60 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எந்த மாநிலங்கள் அதிகக் கடன்களைக் கொண்டிருக்கின்றன.. எந்த மாநிலங்கள் குறைந்த கடன்களைக் கொண்டுள்ளன? இந்த லிஸ்டில் தமிழ்நாடு எங்கே என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தொடர்ச்சியாகப் பல்வேறு விஷயங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது நமது நாட்டில் உள்ள மாநிலங்களின் நிதிநிலை தொடர்பான முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. மாநில நிதிச் செயலாளர்கள் மாநாட்டில் இந்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது.

உயர்வு
இது தொடர்பான தகவல்களைப் பிரபல ஆங்கில நாளேடான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் 28 மாநிலங்களின் மொத்தப் பொதுக்கடன், 2022-23 நிதியாண்டின் இறுதியில் ₹59,60,428 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இது அவற்றின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 22.96 சதவீதமாகும். 2013-14 நிதியாண்டில் மாநிலங்களின் பொதுக்கடன் ₹17,57,642 கோடியாக இருந்த நிலையில், இப்போது அது ரூ.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதாவது 10 ஆண்டுகளில் மாநிலங்களின் கடன்கள் 3.39 மடங்கு அதிகரித்துள்ளது. மாநிலங்களின் ஜிடிபியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கடந்த 2013ல் மாநில ஜிடிபியில் 16.66 சதவீதமாக இருந்த கடன் இப்போது 22.96 சதவீதமாக உயர்ந்துள்ளது.
யார் அதிகம்?
2022-23 நிதியாண்டில், ஜிடிபியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவிலேயே அதிகக் கடன் பெற்ற மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது. பஞ்சாப்பின் ஜிடிபியில் கிட்டத்தட்ட 40%ஐ அது கடனாகப் பெற்றுள்ளது. அதாவது GSDP-கடன் விகிதத்தை வைத்துப் பார்க்கும் போது பஞ்சாப் (40.35%) தான் முதலில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நாகாலாந்து (37.15%) மற்றும் மேற்கு வங்கம் (33.70%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மறுபுறம் ஒடிசா (8.45%), மகாராஷ்டிரா (14.64%) மற்றும் குஜராத் (16.37%) மாநிலங்கள் குறைந்த விகிதத்தில் உள்ளன.
மாநில வாரியான தகவல்
2023 மார்ச் 31 நிலவரப்படி, 8 மாநிலங்களின் பொதுக்கடன் மாநில ஜிடிபி-ல் 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. 6 மாநிலங்களில் 20 சதவீதத்திற்கும் குறைவாகவும், மீதமுள்ள 14 மாநிலங்களில் 20 முதல் 30 சதவீத ரேஞ்சில் இருக்கிறது. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மாநிலங்களின் மொத்தக் கடன் 22.17 சதவீதமாக இருந்தது.
பொதுவாக ஒரு அரசு தனது முதலீட்டுத் தேவைகளுக்காக மட்டுமே கடன் வாங்க வேண்டும்.. ஊதியம் கொடுப்பது உள்ளிட்ட அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கக் கடன்களை வாங்கக் கூடாது. இதுவே கடன் பெறுவதில் கோல்டன் ரூலாக இருக்கிறது. அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கினால் மாநில நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். நமது நாட்டில் 11 மாநிலங்கள் தங்கள் நடப்புச் செலவினங்களுக்குக் கடன் வாங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
மேலும், 2022-23 நிதியாண்டில் 11 மாநிலங்களில் (தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், பீகார், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, மிசோரம், பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் மேற்கு வங்காளம்) மூலதனச் செலவுகள் நிகர பொதுக்கடன் வரவுகளை விடக் குறைவாக இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மாநிலங்களின் நிதி நிலை நல்ல நிலையில் இல்லை என்பதே இதன் பொருளாகும்.












Click it and Unblock the Notifications