நீங்க எடுத்து வரும் தங்க நகைகளை ஏர்போர்ட்களில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்ய முடியுமா? ரூல்ஸ் என்ன
டெல்லி: வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள் தங்கத்தை எடுத்து வருவதாக இருந்தால்.. பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஏனென்றால் நமது நாட்டில் தங்கம் எடுத்து வர சில கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதேநேரம் ஒருவர் அணிந்து வரும் பெர்சனல் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
இப்போது இந்தியர்கள் பலரும் பல வெளிநாட்டிற்கு வேலை மற்றும் படிப்பிற்காகச் செல்கிறார்கள். அதுபோல வெளிநாட்டிற்குச் செல்வோர் இந்தியா திரும்பும்போது தங்கத்தை எடுத்து வருவார்கள். ஆனால், இந்தியாவில் தங்கம் எடுத்து வர பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கிறது.

லிமிட் எவ்வளவு
வெளிநாட்டில் இருந்து திரும்பும் ஒருவர் எவ்வளவு தங்கம் எடுத்து வர முடியும் என ஒரு லிமிட் இருக்கிறது. அதாவது வெளிநாட்டில் இருந்து திரும்பும் ஆண் பயணிகள் அதிகபட்சம் 20 கிராம் (மதிப்பு ரூ.50,000க்கு உள் இருக்க வேண்டும்), பெண் பயணிகள் 40 கிராம் (மதிப்பு ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்) எடுத்து வரலாம். அந்த லிமிட்டை தாண்டினால் சுங்க வரி செலுத்த வேண்டும்.
இதற்கிடையே அப்படி வெளிநாட்டில் இருந்து திரும்புவோர் ஏர்போர்ட்டில் சந்திக்கும் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் டெல்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
டெல்லி ஐகோர்ட்
அதாவது பயணிகளின் பழைய அல்லது தனிப்பட்ட நகைகளைச் சரியான காரணமின்றி பறிமுதல் செய்யக்கூடாது என்று விமான நிலைய சுங்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு சர்வதேச பயணிகள், குறிப்பாக வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள், விமான நிலையத்தில் தேவையற்ற சிக்கல்களைச் சந்திப்பதைத் தடுக்கும்.
இது விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட்டில் சுமார் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களிலும் தங்களின் பெர்சனல் நகைகள் நியாயமற்ற முறையில் பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லி, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் நீதிபதி ரஜ்னிஷ் குமார் குப்தா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வழக்கு விசாரணையில் என்ன நடந்தது
இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (அதாவது CBIC) சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் பல்வேறு துறைகளிடம் ஆலோசனைகளை நடத்த வேண்டி இருக்கிறது. எனவே, புதிய திருத்தப்பட்ட விதிகளை உருவாக்க கால அவகாசம் தேவை" எனக் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டாலும் டெல்லி ஐகோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் வரை நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஸ்டாண்டர்டு ஆப்ரேடிங் நடைமுறை (SOP) அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த தற்காலிக SOP சுங்க அதிகாரிகளுக்கு ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. விமான பயணிகள் தனிப்பட்ட உடைமைகள் தேவையற்ற சிக்கலுக்கு ஆளாகாமல் இருப்பதை இது உறுதி செய்யும்.
கருதக்கூடாது
பயணிகள் அணியும் நகைகள் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கான நகைகளை அதிகப்படியான அல்லது வரி விதிக்கக்கூடிய பொருட்களாகக் கருதக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது. குறிப்பாகப் பாரம்பரிய அல்லது குடும்ப நகைகளை அணிந்து வரும் பெண்கள் அல்லது வயதான பயணிகளைக் கையாளும்போது, சுங்கத் துறை அதிகாரிகள் அதிக கவனத்துடன் அணுக வேண்டும் என்றும் டெல்லி ஐகோர்ட் வலியுறுத்தியது.
இந்தியாவிற்குள் நுழையும்போது பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளக்கூடாது என்றும், இது தொடர்பான விதிகள் முறையாக மாற்றப்படும் வரை சுங்க அதிகாரிகள் நியாயமான மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் டெல்லி நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications