தனியார் துறையை அனுமதித்தால்.. 60 நாட்களில் 50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. விப்ரோ நிறுவனர் ஐடியா
டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு தனியார் துறையை அனுமதித்தால் 60 நாட்களில் 50 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்று விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருகிறது. இருப்பினும், கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படுவதைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கு முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை சுமார் 1.11 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

50 கோடி பேருக்கு தடுப்பூசி
இந்நிலையில், நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள தனியார் துறைகளையும் இதில் அனுமதிக்க வேண்டும் என்று விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அப்படி தனியார் துறையை அனுமதித்தால், 60 நாட்களில் 50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விநியோகிப்பதே முக்கிய பணி
கொரோனா தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் குறைந்த நேரத்தில் உருவாக்கியுள்ளனர் என்றும், இப்போது அவற்றை விரைவில் மக்களுக்கு விநியோகிப்பதே முக்கிய பணி என்றும் அசிம் பிரேம்ஜி கூறினார். அரசு தன்னால் முடிந்ததை வரை இந்தப் பணியைச் சிறப்பாக மேற்கொள்ளவதாக குறிப்பிட்ட அவர், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தனியார் துறையை அனுமதித்தால் வேகமாக அதிக நபர்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

400 ரூபாய்க்கு தடுப்பூசி
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "சீரம் நிறுவனம் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை 300 ரூபாய்க்கு வழங்க வாய்ப்பு உள்ளது. மேலும், இதர செலவினங்களுக்கு ரூ. 100 செலவானாலும்கூட, கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸை 400 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு வழங்க முடியும். தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அரசு இதை நிச்சயம் பரிசோதனை செய்ய வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

சுகாதார துறை
மேலும், நாட்டிலுள்ள சுகாதார துறை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்பதையே கொரோனா தொற்று நமக்கு எடுத்துரைத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். விப்ரோ நிறுவனத்தின் நிறுவனரான அசிம் பிரம்ஜி கொரோனாவுக்கு எதிராகப் போராட அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications