அடுத்த 10 ஆண்டுக்கு மாஸ்டர் பிளான் ரெடி! இறுதியாகும் மிக முக்கிய டீல்.. கனடா பிரதமர் இந்தியா வருகை
டெல்லி: கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். நான்கு நாட்கள் இந்தியா வரும் மார்க் கார்னி, தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். இந்தியா கனடா உறவு கடந்த சில காலமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்க் கார்னியின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா கனடா இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நல்லுறவே இருந்து வந்தது. கொரோனா காலத்தில் கூட இந்தியாவே கனடா நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி உதவியது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக இருந்தபோது மொத்தமாக மாறியது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கே இருந்தது.

இந்தியா கனடா உறவு
அதாவது கனடாவில் சீக்கிய பயங்கரவாதி கொல்லப்பட்டதற்கு இந்தியா தான் காரணம் என ஆதாரமே இல்லாமல் ஜஸ்டீன் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். ஆதாரம் வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என இந்தியா கூறிய போதிலும், ஆதாரத்தை ட்ரூடோ அரசு வழங்கவில்லை. மாறாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டியே வந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ட்ரூடோ தேர்தலில் தோற்க, மார்க் மார்னி கனடா பிரதமராகப் பதவியேற்றார். அதன் பிறகே இந்தியா கனடா இடையேயான உறவு சீரடையத் தொடங்கியது. நேற்றைய தினம் கனடாவில் நடந்த தீவிரவாதத்திற்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இல்லை என கனடா அரசு வெளிப்படையாகவே அறிவித்தது. இந்தச் சூழலில் தான் இன்று மார்க் கார்னி அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார்.
இந்தியா வருகை
4 நாட்கள் அரசு முறை பயணமாக கார்னி இந்தியா வரும் நிலையில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார். முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுகிறார். மேலும், பிரதமர் மோடியை வரும் மார்ச் 2ம் தேதி சந்தித்து பேசுகிறார். இதில் பல முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுரேனியம்
குறிப்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே 2.5 பில்லியன் டாலர் மதிப்பிலான யுரேனியம் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இது இரு நாடுகளின் எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான முக்கிய ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாகும். இந்த 2.5 பில்லியன் டாலர் யுரேனியம் ஒப்பந்தம், இந்தியாவின் அணுமின் நிலையங்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தேவையான யுரேனிய விநியோகத்தை உறுதி செய்யும். உள்நாட்டில் யுரேனிய இருப்பு குறைவாக இருப்பதால், இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிக முக்கியமானது.
எரிவாயு
அதேபோல கனடாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கவும் இந்தியா உறுதியளிக்கும் ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகும். டிரம்ப் கோரிக்கையைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து வரும் சூழலில், கனடா உடன் இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது. கனடாவும் கூட தனது சாட்டிலைட்களை அனுப்ப இந்தியாவுடன் ஒப்பந்தம் உட்படப் பல முக்கிய டீல்களை இறுதி செய்கிறது.
இந்தியா கனடா பதற்றத்தை தொடர்ந்து சில ஆண்டுகளாகவே கனடா செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. இதற்கிடையே மார்க் கார்னி இந்திய பயணத்திற்கு பிறகு, இரு நாட்டு உறவு மேம்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கனடா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.















Click it and Unblock the Notifications