தமிழகத்துக்கு 15 நாள் 3,500 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
டெல்லி: தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது. இதனை அப்படியே காவிரி மேலாண்மை ஆணையம் இன்று ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி தமிழகத்துக்கு 15 நாட்கள் தினமும் 3,500 கனஅடி தண்ணீர் திறக்க அதிரடியாக காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் அலுவலக கட்டிடத்தில் இன்று கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா சார்பில் பிரதிநிதிகள் காணொலி வழியாக பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில், ''காவிரியில் முறைாக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். காவிரி நீர் ஒழுங்காற்று குழு சார்பில் 15 நாட்களுக்கு தலா 3,500 கனஅடி தண்ணீரை காவிரியில் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனை அப்படியே நிறைவேற்ற வேண்டும்'' என்று வாதிடப்பட்டது.
கர்நாடகா சார்பில், ''கர்நாடகாவில் மழை இல்லை. வறட்சி நிலவி வருகிறது. அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்ததை ஏற்க கூடாது'' என்று கூறியது. இருதரப்பு விவரங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு அதிரடியாக உத்தரவிட்டது.
அதன்படி காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துறையை அப்படியே காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டதோடு, 15 நாட்களுக்கு தலா 3,500 கனஅடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தமிழகத்துக்கு கிடைத்த குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. ஆனால் கர்நாடகாவே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறி வருகிறது.
மேலும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா அரசு செயல்படுத்துமா? இல்லாவிட்டால் வேறு ஏதாவது நிவாரணம் கோரி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
