தமிழகத்துக்கு 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்
டெல்லி: தமிழகத்துக்கு மொத்தம் 40 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகா- தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் விவகாரத்தில் 2018-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகா மாநில அரசானது காவிரியில் 177.25 டி.எம்.சி. நீரை திறந்துவிட வேண்டும் என்று வழங்க வேண்டும்.

இந்த நதிநீர் பங்கீட்டை செயல்படுவதற்கு காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு, தமிழகத்தை வடிகாலாகவே பயன்படுத்தி வருகிறது.
அத்துடன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அடம்பிடிக்கிறது கர்நாடகா. காவிரி நதியை கர்நாடகா மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. இன்னமும் சொல்லப் போனால் சர்வதேச சட்டங்களின் படியே கீழ் பாசன மாநிலமாகிய தமிழகத்துக்கே காவிரியில் அதிக உரிமை உண்டு. ஆனால் கர்நாடகாவின் அடாவடித்தனமான போக்கு மேகதாது விவகாரத்தில் வெளிப்பட்டு வருகிறது.
அண்மையில் 2 வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் செப்டம்பர் மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய 28 டி.எம்.சி. நீர்; அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டி.எம்.சி. நீர் என மொத்தம் 48 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தையும் எழுப்பியது கர்நாடகா. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தர் இதனை நிராகரித்தார். மேலும் தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தின் முடிவில் தமிழகத்துக்கு 40 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. அதாவது நிலுவையில் உள்ள 25.84 டி.எம்.சி நீர் மற்றும் இம்மாதம் தர வேண்டிய 14 டி.எம்.சி. என மொத்தம் 40 டி.எம்.சி. நீரை தமிழகத்துக்கு திறந்துவிட பரிந்துரைத்துள்ளது ஒழுங்காற்று குழு. இந்த பரிந்துரை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும். மேலும் அடுத்த 10 நாட்களில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூட்டப்பட உள்ளது என்று ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications