டார்கெட் எதிர்க்கட்சிகள்- ரயில்வே பணிக்கு லஞ்சம்- தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!
டெல்லி: ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பான வழக்கில் பீகார் துணை முதல்வரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு துணையாக நிற்பவருமான ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்த 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு பணிகளை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நிதிஷ்குமாருடன் தேஜஸ்வி யாதவும் பயணம் மேற்கொண்டிருந்தார். பாட்னாவை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் ஜூலை 13,14-ல் நடைபெறுவதாக இருந்தது. இந்தக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாட்னா எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆர்ஜேடி நிறுவனர் லாலுவும் பங்கேற்றிருந்தார்.
இதனிடையே ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றது தொடர்பான வழக்கில் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2004-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்த போது ரயில்வே பணிகளுக்காக அவரது குடும்பத்துக்கு நிலம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது வழக்கு. இந்த வழக்கில் ஒட்டுமொத்தமாக லாலு குடும்பமே சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி, ராஜ்யசபா எம்பி மிசா பாரதி, தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து தற்போது, தேஜஸ்வி யாதவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இப்புதிய குற்றப்பத்திரிகையில் தேஜஸ்வி யாதவ், லாலு பிரசாத், ராபரி தேவி பெயர்களை சிபிஐ சேர்த்திருக்கிறது. இவ்வழக்கில் சிபிஐ அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications