சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் விஜய்க்கு.. 'Y' பிரிவு பாதுகாப்பு? உத்தரவாதம் கொடுத்த போலீஸ்!
டெல்லி: கரூர் நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக்காக நாளை விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார். அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து டெல்லி போலீஸ் விளக்கமளித்துள்ளது.

கரூர் துயரமும் சிபிஐ வழக்கும்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27ம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பிரச்சாரத்தில் விஜய்யை பார்க்க கூட்டம் கூடியதில், நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவெகவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை
சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், தவெக நிர்வாகிகளிடமும் விசாரணை நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக்குழு, சம்பவம் நடந்த இடத்தை பார்வைிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையிலும் விசாரணை மேற்கொண்டிருந்தது.
பிரச்சார வாகனம்
அதேபோல மத்திய உள்துறை அமைச்சக விவகாரத்துறை அதிகாரி தலைமையில், தடயவியல் துறையினர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக கரூர் சிபிஐ அலுவலத்திற்கு, விஜய்யின் பிரச்சார வாகனம் கொண்டுவரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிபிஐ ஆய்வு
பேருந்தின் கண்டிஷன் எப்படி இருக்கிறது? பிரச்சாரம் மேற்கொள்ளும் அவளவுக்கு பேருந்து, போதுமான அம்சங்களுடன் இருக்கிறதா என்பதையும், மத்திய தடயவியல் அறிவியல் துறையினர் வேலுச்சாமிபுரத்தில் சாலைகளை அளவீடு செய்தும் ஆய்வு செய்திருந்தனர். இதனையடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை, விஜய் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
பாதுகாப்பு கோரிக்கை
இதனையடுத்து, டெல்லியில் விஜய்க்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று, தவெக டெல்லி போலீசுக்கு மனு அனுப்பப்பட்டிருந்தது. நாளை டெல்லி செல்லும் விஜய், நாளை மறுநாள்தான் சென்னை திரும்புகிறார். எனவே நாளை இரவு அவர் தங்கும் இடத்தில் பாதுகாப்பு தேவை என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஒய் பிரிவு பாதுகாப்பு என்றால் என்ன?
இதனையடுத்து விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிப்பதாக டெல்லி போலீஸ் தெரிவித்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒய் பிரிவு பாதுகாப்பு எனில் 8-11 பாதுகாப்பு வீரர்கள் விஜய்க்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். இதில் 1-2 வீரர்கள் என்எஸ்ஜி அல்லது சிஆர்பிஎஃப் வீரர்களாக இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ஆயுதம் ஏந்திய காவலர்களாக இருப்பார்கள். இவர்கள் விஜய்க்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications