Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 3வது மொழி கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய பயணம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் வரும் 2026-27 கல்வியாண்டில் புதிய தேசிய கல்வி கொள்கையின்படி 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

cbse-3-language-formula-union-education-minister-reply-to-mk-stalin-who-opposes-nep

இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் சிபிஎஸ்சி-யின் முடிவுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

''தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சார்ந்து, அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது சாதாரண கல்விச் சீர்திருத்தம் அல்ல; அது மொழித் திணிப்பை நோக்கிய, நாம் நீண்டகாலமாக வெளிப்படுத்தி வந்த அச்சங்களை உறுதிப்படுத்தும் வகையிலான, நன்கு திட்டமிடப்பட்ட ஆழ்ந்த கவலைக்குரிய முயற்சியாகும்.

“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு 'காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு!
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு 'காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு!

"இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம்" என்ற போர்வையில், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்மைத்துவம் நிறைந்த மொழிப் பாரம்பரியத்தைத் திட்டமிட்டு ஒதுக்கி, இந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை அரசியல் நோக்கத்துடன் பா.ஜ.க. தலைமையிலான NDA அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. "மும்மொழிக் கொள்கை" என்பது, உண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை விரிவுபடுத்தும் முயற்சியாகும்.

தென் மாநில மாணவர்களைப் பொறுத்தவரையில், இந்தத் திட்டம், கட்டாய இந்தி என்பதைக் கடந்து வேறேதுமில்லை. இருப்பினும், இதில் ஒருவருக்கொருவர் இடையிலான பரிமாற்றம் எங்கே இருக்கிறது? இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது வங்கம், மராத்தி உள்ளிட்ட மொழிகளைக் கட்டாயமாகப் படிப்பார்களா? இதுகுறித்த தெளிவின்மை, இதிலுள்ள ஒருசார்பையும் - பாகுபாட்டையும் வெளிப்படுத்துகிறது.

இந்த முரண் வெளிப்படையானது, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்க முடியாத - தொடர்ச்சியாகப் போதிய தமிழாசிரியர்களை நியமிக்கத் தவறிய இதே ஒன்றிய அரசு, இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்று மாநிலங்களுக்குப் பாடம் எடுக்க நினைக்கிறது. இது பொறுப்புணர்வல்ல; கபட நாடகத்தின் உச்சம்!

சீமான் வாக்கு இனி ஸ்டாலினுக்கு.. மும்மொழி எதிர்ப்பு- ₹ மாற்ற பின்னணி என்ன? மாதவன் நாரயணன் கணிப்பு
சீமான் வாக்கு இனி ஸ்டாலினுக்கு.. மும்மொழி எதிர்ப்பு- ₹ மாற்ற பின்னணி என்ன? மாதவன் நாரயணன் கணிப்பு

ஆசிரியர்களின் எண்ணிக்கை, போதிய பயிற்சிக்கான திறன் மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவை குறித்த உண்மைக் களநிலவரத்தை ஒன்றிய அரசு உணர்ந்திருக்கிறதா? இந்தச் செயல்திட்டத்தை அமல்படுத்த தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் எங்கே இருக்கிறார்கள்? கல்வித் துறையில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தும் இந்த நகர்வுக்கான நிதி ஆதாரம் எங்குள்ளது? எவ்விதத் திட்டமிடலும், வளங்களும், பொறுப்பும் இல்லாத உள்நோக்கம் கொண்ட மற்றுமோர் திட்டமாகவே இது தோன்றுகிறது.

இது மொழி குறித்த கேள்வி மட்டுமல்ல; நியாயம், கூட்டாட்சி மற்றும் சமவாய்ப்புகள் குறித்த கேள்விகளுமாகும். இந்தி பேசும் மாணவர்களைக் கட்டமைப்புரீதியான சலுகைகளை அளித்து, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு ஆதாயம் ஏற்படுத்துவதோடு, மாநிலங்களுக்கிடையே மேலும் ஏற்றத்தாழ்வுகளையே இது உண்டாக்கும்.

முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முன்னோக்கி நகரும் வேளையில், நம் குழந்தைகள் எதிர்காலத்திற்காகத் தயாராக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன் - விஷுவல் எஃபக்ட்ஸ் - கேமிங் - காமிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் அவர்களது திறனை மேம்படுத்தி, அவர்களது அறிவியல் பார்வையையும் திறனாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்க வேண்டும். மாறாக, இத்தகைய பிற்போக்குத்தனமான, இறுக்கமான மொழிச் சுமை அவர்களது முன்னேற்றத்தைத் தடுப்பதாக உள்ளது.

Fact Check: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் சேலம் ஆசிரியர் கைதா? பரவும் வதந்தியின் பின்னணி
Fact Check: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவிட்டதால் சேலம் ஆசிரியர் கைதா? பரவும் வதந்தியின் பின்னணி

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக எழுப்பிய நியாயமான - ஜனநாயகப்பூர்வமான கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்தியைத் திணிப்பதில் ஒன்றிய அரசு மும்முரமாக இருப்பது தெரிகிறது. இந்தச் செயல், கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கு எதிரானது, கோடிக்கணக்கான இந்தியர்களின் மொழி அடையாளங்களை நேரடியாக அவமதிக்கும் செயல்.

இந்தியாவின் வலிமை என்பது, பன்முகத்தன்மையில்தான் இருக்கிறதே தவிர, திணிக்கப்படும் ஒற்றைத்தன்மையில் இல்லை. இந்தச் சமநிலையைக் குலைக்கும் எத்தகைய முயற்சிகளும் தவறானவை மட்டுமல்ல, ஆபத்தானதுமாகும். நம் நாட்டின் அடிப்படையான பன்மைத்துவத்தையே தாக்கும் இத்தகைய கொள்கைகள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிவையாகும். திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வும், அதன் NDA கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திணிப்பை ஏற்றுக்கொள்கின்றனரா? அல்லது நமது மாணவர்களின் எதிர்காலம், அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக ஒரே ஒரு முறையாவது முதுகெலும்போடு எதிர்ப்பார்களா?'' என பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார். ஸ்டாலினின் பதிவை 'டேக்' செய்து தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதாவது: ''தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறும் "திணிப்பு" என்ற வாதம், அரசியல் தோல்விகளை மறைப்பதற்கான ஒரு சோர்வான முயற்சியாகும். தேசிய கல்விக் கொள்கை 2020, உண்மையில், மொழி விடுதலைக்கான ஒரு பிரகடனமாகும்.

ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தமது பெருமைமிக்க மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அது தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஒரு நெகிழ்வான கொள்கையை "கட்டாய இந்தி" என்று தவறாக சித்தரிப்பதன் மூலம், நீங்கள் தமிழைப் பாதுகாக்கவில்லை; மாறாக, நமது இளைஞர்கள் பன்மொழித் திறன் கொண்ட உலகளாவிய தலைவர்களாக உருவெடுக்கும் வாய்ப்பை மறுக்கும் தடைகளை உருவாக்குகிறீர்கள்.

6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம்
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம்

பன்மொழித்தன்மையை ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பது தவறானதாகும். கூடுதல் மொழிகளைக் கற்பதால் தமிழ் பலவீனமடைவதில்லை; மாறாக, அதன் பேச்சாளர்கள் பன்மொழித் திறன் கொண்டவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், மொழிரீதியாக வலுவூட்டப்பட்டவர்களாகவும் இருக்கும்போது அது செழுமையடைகிறது.

தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மொழிகளையும் சமமாக ஊக்குவிப்பதன் மூலம் அரசியலமைப்பு கோட்பாடுகளை நிலைநிறுத்துவதோடு, தற்போதுள்ள இருமொழி அமைப்பின் வரம்புகளையும் நிவர்த்தி செய்கிறது.

சமக்ர சிக்ஷா, ஆசிரியர் பயிற்சி, மற்றும் NPST, NMM போன்ற தேசிய கட்டமைப்புகளுடன், DIET-கள் போன்ற நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற முன்னெடுப்புகள் மூலம் செயல்படுத்துவதில் இது மேலும் கவனம் செலுத்துகிறது.

"பரஸ்பர ஒத்துழைப்பு" குறித்த உங்கள் கேள்விகள் கள யதார்த்தத்தைப் புறக்கணிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், காசி தமிழ்சங்கம் முதல் உலக அரங்கம் வரை தமிழ் ஒரு தேசியப் பொக்கிஷமாகப் போற்றப்பட்டு வருகிறது.

மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களை இந்திய மொழிகளைக் கற்கத் தீவிரமாக ஊக்குவிக்கும் வேளையில், உங்கள் அரசு பிரிவினைவாத வாக்கு வங்கி பிரச்சாரத்திற்காகத் தமிழ் மாணவர்களுக்குப் பல்வேறு வாய்ப்புகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

தற்போதைய பேச்சு வெறும் வெளிவேஷமே. தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதாக உறுதியளித்த பின்னரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து, அதனைத் தடுத்து நிறுத்தியது திமுக அரசுதான்.

தமிழ்நாட்டில் நவோதயா வித்யாலயங்களை நிறுவ வேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், உங்கள் அரசு கல்வி சமத்துவத்தை விட அரசியல் பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றின் செயலாக்கத்தைத் தொடர்ந்து தடுத்து வருகிறது. இந்த வேண்டுமென்றே செய்யப்படும் எதிர்ப்பு என்பது வெறும் நிர்வாக மீறல் மட்டுமல்ல; இது, தரமான, தகுதி அடிப்படையிலான உறைவிடக் கல்வியால் பயனடையக்கூடிய லட்சக்கணக்கான நலிவடைந்த மாணவர்களுக்குச் செய்யப்படும் நேரடித் தீங்காகும்.

இது, தனது சொந்த மாணவர்களிடமிருந்து நவீன உள்கட்டமைப்பையும் ஆசிரியர்களையும் திறம்படத் தடுத்து நிறுத்தியுள்ளது. மத்திய அரசு நிதியுதவி மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு முழுமையாக உறுதியுடன் உள்ளது, ஆனால் உங்கள் "நேர்மையற்ற" அரசியலால் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது.

ஒரு முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய சீர்திருத்தத்தை 'மொழித் திணிப்பு' என்று தவறாகச் சித்தரிப்பது, தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் நோக்கம் கொண்டது. உண்மையான கவலை, ஒருவேளை, கொள்கையின் தெளிவு அல்ல, மாறாக அதை ஒப்புக்கொள்ள முதலமைச்சரின் விருப்பமின்மையே ஆகும்.

அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியாவின் மொழிப் பன்மையைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் சாரத்தை அவர் புறக்கணிக்கிறார். நிர்வாகத் தோல்விகளை மறைக்க "இந்தித் திணிப்பு" வாதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொரு இந்திய மொழிக்கும் வலுவூட்டும் தேசிய இயக்கத்தில் இணையுங்கள்'' என பதிலளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+