"விஜய் கால் வைக்கும் இடத்தில் கன்னிவெடி"! ஜனநாயகனை துரத்தும் சென்சார்! சுப்ரீம் கோர்டில் கேவியட் மனு
டெல்லி: ஜனநாயகன் பட விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தணிக்கை வாரியமும் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது. அதில் சென்சார் சான்றிதழ் தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான விவகாரத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.
விஜய்யின் கடைசிப் படமாக அறியப்படும் இத்திரைப்படம், ஜனவரி 9 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டு, படம் மறு தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து KVN புரொடக்ஷன்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி. ஆஷா, படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், இதற்கு எதிராக தணிக்கை வாரியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் அமர்வு, தனி நீதிபியின் உத்தரவுக்கு தடை விதித்தது. இவ்வழக்கு விசாரணை ஜனவரி 21-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
உயர்நீதிமன்றத் தடைக்கு எதிராக, 'ஜனநாயகன்' தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. பிழைகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட மனு ஏற்கப்பட்டது. தற்போது, வழக்கு எண் ஒதுக்கப்பட்டு, விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் ஜனநாயகன் பட விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய்யிடம் டெல்லி சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. இந்த நிலையில் அவர் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி என்பதை போல் தணிக்கை குழு உச்சநீதிமன்றம் சென்று செக் வைத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் ரிலீஸாகாததால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாக உயர்நீதிமன்றத்தில் வாதம் முன் வைத்தும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வோ, "தணிக்கை சான்றிதழ் வாங்காமல் பட ரிலீஸ் தேதியை யார் அறிவிக்கச் சொன்னது? தேதியை அறிவித்துவிட்டு எங்களுக்கு ஏன் அழுத்தம் கொடுக்கறீங்க" என கேள்வி எழுப்பியிருந்தனர். வரும் 21 ஆம் தேதி ஜனநாயகனுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அந்த படம் 23 ஆம் தேதி வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
24, 25, 26 ஆகிய 3 நாட்கள் விடுமுறை என்பதால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமா ஜனநாயகன் படக் குழு என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications