வருகிறது புதிய 290% வரி.. நிர்மலா சீதாராமனின் இந்த கலால் வரி மசோதாவால் எந்த பொருட்கள் விலை உயரும்?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய செஸ் வரி மசோதாவை அறிமுகப்படுத்துகிறார். புகையிலைப் பொருட்கள் மீதான இழப்பீட்டு செஸ் வரி முடிவுக்கு வரும் நிலையில், அதற்குப் பதிலாகப் புதிய வரியை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த மசோதா எதற்காக.. இதன் மூலம் பொருட்களின் விலை உயருமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.. இருப்பினும், முதல் இரு நாட்கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. சார் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் அமளி தொடர்கிறது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது.

புதிய வரி
இதற்கிடையே புகையிலை மற்றும் பான் மசாலா பொருட்களுக்கான வரி விதிப்பு அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில் மத்திய அரசு இரண்டு முக்கிய மசோதாக்களை மக்களவையில் அறிமுகப்படுத்துகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக 'மத்திய கலால் வரி திருத்த மசோதா, 2025' மற்றும் 'சுகாதாரப் பாதுகாப்பு செஸ் மசோதா 2025' ஆகிய இரு மசோதாக்களை இன்று லோக்சபாவில் தாக்கல் செய்கிறார்.
ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் முடியும் நிலையில், மீண்டும் புகையிலைப் பொருட்களுக்கு வரி விதிக்கும் வகையில் மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வருகிறது. இந்த மசோதாவில் சிகரெட் விலை 10 முதல் 15% வரை உயரலாம் எனச் சொல்லப்படுகிறது.
290% வரி
இப்போது சிகரெட், புகையிலை, ஹூக்கா உள்ளிட்ட பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் இழப்பீட்டு செஸ் விதிக்கப்படுகிறது. இந்த செஸ் வரியானது ஒவ்வொரு புகையிலைப் பொருட்களுக்கும் மாறுபடும். அதிகபட்சம் 290% வரை இந்த வரி விதிக்கப்படும்.. மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் கடந்த 2017இல் இழப்பீட்டு செஸ் கொண்டு வரப்பட்டது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலைக் கருத்தில் கொண்டு இது 2026 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த இழப்பீட்டு செஸ் வரி முடிவுக்கு வந்தால் புகையிலைப் பொருட்கள் மீதான வரி குறையும். புகையிலை பயன்பாட்டை ஒழிக்கவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் சூழலில் புதிய கலால் வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மசோதா புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான மத்தியக் கலால் வரி விகிதத்தை அதிகரிக்கும் நிதிச் சுதந்திரத்தை மத்திய அரசுக்கு வழங்கும்!
நிரந்தர வரி கட்டமைப்பு
இந்த மத்திய கலால் வரி திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு புகையிலை மீதான இழப்பீட்டு செஸ் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த மத்திய கலால் வரியை விதிக்கப்படும். இது மத்திய அரசுக்கு வரி விகிதங்களைத் திருத்தும் அதிகாரம் அளிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் புகையிலை மீது வரி தொடர்ந்து அதிகமாக வைத்திருக்கப்படும். அதாவது தற்காலிக செஸ் என்பதற்குப் பதிலாக நிரந்தர வரி கட்டமைப்பு உருவாக்கப்படும்.
இத்தோடு சுகாதாரப் பாதுகாப்பு செஸ் மசோதாவையும் மத்திய அரசு கொண்டு வருகிறது. பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு ஒரு கூடுதல் செஸ் வரியை இது முன்மொழிகிறது. ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகளுடன், இந்த செஸ் வசூலிக்கப்படும். பொது சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த செஸ் வரி வருவாய் பயன்படுத்தப்படும்.
விலை ஏறும்
இந்த இரு மசோதாக்களும் ஒன்றிணைந்து, புகையிலை மற்றும் பான் மசாலா மீதான மொத்த வரிச்சுமை மாறாமல் இருக்கும். அதாவது புகையிலைக்கான இழப்பீட்டு செஸ் வரிக்குப் பதிலாக நிரந்தர மத்திய கலால் வரியும், பான் மசாலாவுக்கு சுகாதார பாதுகாப்பு செஸ் வரியும் விதிக்கப்படும். இந்த மசோதாவில் சிகரெட் விலை 10 முதல் 15% வரை உயரலாம் எனச் சொல்லப்படுகிறது












Click it and Unblock the Notifications