நெருங்கும் தேர்தல்.. தமிழகத்தில் ரூ.319ஆக உயர்த்தப்பட்ட 100 நாள் வேலையின் ஊதியம்! மத்திய அரசு அதிரடி
டெல்லி: கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை தற்போது மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான ஊதியம் ரூ.319ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
இந்த லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு இரண்டு வகையில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா. அதாவது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பு 2025ல் நூற்றாண்டை சந்திக்கிறது. இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு பாஜக ஆட்சியில் இருப்பது அவசியம்.

அதேபோல, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமரான தலைவர் என்கிற பெருமை இவரை சேரும். எனவே இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மகாத்மா காந்தி 100 வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்திருக்கிறது.
கடந்த 2005ம் ஆண்டில் பொருளாதார மந்த நிலை லேசாக தலைதூக்கியிருந்தது. எனவே, எல்லோரிடமும் பணப்புழக்கத்தை ஏற்படுத்த அப்போதைய காங்கிரஸ் அரசு முடிவெடுத்திருந்தது. இப்படியாக கொண்டுவரப்பட்டதுதான் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம். இதன் நோக்கம் கிராமப்புறங்களில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்குவதுதான். ஆண்டில் 100 நாட்களில் வேலை இருக்கும். ஒரு நாளைக்கு ரூ.100 கூலியாக வழங்கப்பட்டது.
எதிர்பார்த்தபடி இது நல்ல பலனை கொடுத்தது. 2008 உலக பொருளாதார நெருக்கடியில் பெரிய பாதிப்பில்லாமல் இந்தியா தப்பித்ததற்கு கிராம மக்களிடையே பணப்புழக்கம் அதிகரித்ததும் ஒரு காரணமாகும். ஆனால் அடுத்தடுத்த வந்த ஆட்சியாளர்கள் இந்த திட்டத்திற்கான நிதியை குறித்தனர். குறிப்பாக பாஜக ஆட்சிக்காலத்தில் இதற்கான நிதி கடுமையாக வெட்டப்பட்டது என காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.294ஆக இருந்த ஒரு நாள் ஊதியம் ரூ.319ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. இதில் தென் மாநிலங்களில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டன. இப்படியான ஆலோசனைக்கு பிறகே தற்போது 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியம் உயர்த்தப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.2 குறைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications