வெடித்த சீன விவகாரம்.. பதிலே இல்லை.. குளிர்கால கூட்டத் தொடரை சீக்கிரமே முடித்துக்கொள்ள அரசு முடிவு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை வரும் 29ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இதனை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் குறைந்தபட்சம் 20 நாட்கள் வரை நடைபெறும். அந்த வகையில் இந்த முறை டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத் தொடரில் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல இந்தியா சீனா எல்லை விவகாரங்கள், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டிருந்தன.

எல்லைப் பிரச்னை
இந்நிலையில்தான் அருணாச்சலப் பிரதேசத்தில் சீன வீரர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த பிரச்னை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டு நாடாளுமன்ற அவையில் முழுக்கமிட தொடங்கின. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பாக விளக்கம் அளித்த பின்னரும் இதனை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அதேபோல நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பாரத் ஜடோ யாத்திரையில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தி எல்லை பிரச்னை குறித்து மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். சீனா போருக்கு தயாராகி வரும் நிலையில் மத்திய அரசு தூங்கிக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்

ரூபாய் மதிப்பு
அதேபோல ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரச்னையையும் காங்கிரஸ் எழுப்பி இருந்தது. ஆனால் இதற்கு மாறாக 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் பெரும் இடையூரை ஏற்படுத்தின. குறிப்பாக சீனா விவகாரத்தில் மத்திய அரசு மக்கள் முன்பு சிங்கம் போல காட்டிக்கொள்வதாகவும், அதே சீனா முன்பு எலி போல பதுங்கிக்கொள்வதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள மக்களைவை வணிக ஆலோசனைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை
எனவே வரும் 23ம் தேதியுடன் இக்கூட்டத் தொடர் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரும் நிலையில் விரைவாக கூட்டத் தொடரை முடிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததாகவும் இதனால்தான் கூட்டத் தொடர் விரைவில் முடிவடைகிறது என்றும் சொல்லப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தாலும், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி உள்ளிடோர் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி
எல்லை விவகாரத்தில் மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் இவர் வைத்திருந்த விமர்சனங்கள் காட்டமானது. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. "பண்டைய சீனர்களின் தற்போதைய நவீன போர் தந்திரத்தை பிரதமர் மோடி அறியாதவராவார். அவர் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை புரிந்துகொள்ள தவறிவிட்டார். ஆனால் மோடியுடனான 1to1 சந்திப்பில் அவரைபற்றி ஜி ஜிங்பிங்க் மதிப்பீடு செய்துவிட்டார். பிரதமர் மோடியிடம் எவ்விதமான செயலூக்க உத்தியும் இல்லை என்று ஜி ஜிங்பிக் முடிவு செய்துவிட்டார்" என்று அவர் கூறியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications