மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை- ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம்- மத்திய அரசு
டெல்லி: தூத்துக்குடியில் தமிழக அரசால் மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்கு நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு வாயு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பகுதி நிலத்தடி நீரும் காற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஒடுக்க 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகிய சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

வேதாந்தா மனு
இந்த நிலையில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அதில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறோம் என மத்திய, மாநில அரசுகளுக்கு வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
வேதாந்தா நிறுவனத்தின் இந்த முயற்சியானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அத்துடன் நிற்காமல் உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக ஒரு மனுவை வேதாந்தா குழுமம் தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது.

1,000 டன் ஆக்சிஜன் இலவசம்
வேதாந்தா நிறுவனம் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜாரகினார். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் 1000 டன் ஆக்சிஜனையும் இலவசமாக வழங்கவும் வேதாந்தா நிறுவனம் தயாராக இருக்கிறது என்றார்.

மத்திய அரசு அனுமதி
அப்போது, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி தரலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி போப்டே, ஆக்சிஜன், மருந்து பொருட்கள் பற்றாக்குறை தொடர்பான விவகாரங்கள், உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரிக்கும்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு ஆக்சிஜன், மருந்து பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டியது கட்டாயமாகும் என்றார். அத்துடன் இந்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications