கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில்.. திட்டத்தை நிராகரிக்க காரணமே இதுதான்! மத்திய அமைச்சர் விளக்கம்
டெல்லி: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டுவரப்பட வேண்டும் என்று திட்டத்தை தமிழக அரசு சமர்ப்பித்திருந்தது. ஆனால், திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணையமைச்சர் டோகன் சாஹு பதிலளித்துள்ளார்.
இந்தியாவில், மெட்ரோ ரயில் திட்டங்கள் வேகமாக பெருகி வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 நகரங்களில் சுமார் 1,083 கி.மீ. அளவிலான மெட்ரோ மற்றும் RRTS வழித்தடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் அதிக செலவினம் கொண்டவை என்பதால், 2017 மெட்ரோ ரயில் கொள்கையின்படி விரிவான மதிப்பீடு தேவைப்படுகிறது.

5 காரணங்கள்
இந்நிலையில், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்தது குறித்து விளக்கமளித்த அமைச்சர், "மத்திய அரசு மெட்ரோ திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கும் முடிவை, மாநில அரசுகளால் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கையின் சாத்தியக்கூறுகள் மற்றும் கிடைக்கும் வருவாயின் அடிப்படையில் பரிசீலிக்கிறது. நகரங்கள் அல்லது நகர்ப்புற மையங்களில் இத்திட்டங்களுக்கான நிதி ஆதரவு, இந்த காரணிகளின் அடிப்படையிலேயே அமையும்.
முதல் காரணம்
தமிழ்நாடு அரசு, கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் விரிவான போக்குவரத்துத் திட்டம் ஆகியவற்றைச் சமர்ப்பித்தது. இந்தக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சில காரணங்களால் தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இப்படி திருப்பி அனுப்பப்பட்டதற்கான பிரதான காரணம் சராசரி பயண தூரம் குறைவாக இருப்பதாலும், தற்போதுள்ள சாலைகளில் வேகமான பயணம் சாத்தியமாவதாலும், மெட்ரோ சேவையைப் பயன்படுத்துவதால் பயண நேரத்தில் குறிப்பிடத்தக்க சேமிப்பு இருக்காது. இதனால், பயண முறை மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால்தான்.
மக்கள் தொகை எண்ணிக்கை
இரண்டாவதாக, கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதி தவிர, உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகையும் மெட்ரோ அமைப்பால் சேவை பெறுவதாகக் கருதப்பட்டது. ஆனால், மாநகராட்சி பகுதியை விட, ஐந்து மடங்கு பெரியதாக உள்ள திட்டமிடல் பகுதியில் வசிப்பவர்கள் இந்த புதிய மெட்ரோ அமைப்பைப் பயன்படுத்துவது கடினம் என ஆய்வில் தெரியவந்தது.
உண்மையான எண்ணிக்கை
மூன்றாவது காரணம், பயணிகளின் எண்ணிக்கை. கோயம்புத்தூரில் 34 கி.மீ. நீளமுள்ள திட்டமிடப்பட்ட மெட்ரோ வழித்தடத்திற்கு ஒரு நாளைக்கு 5.9 லட்சம் பயணிகள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையின் பெரிய மக்கள் தொகை கொண்ட 55 கி.மீ. மெட்ரோ முதல் கட்டத் திட்டத்தில் தினமும் 4 லட்சம் பயணிகள் என்ற உண்மையான எண்ணிக்கையை விட அதிகம். எனவே, கோயம்புத்தூரின் கணிப்பு யதார்த்தமற்றது.
நான்காவதாக, பல இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்க போதுமான வழித்தடத்திற்கான நிலம் கிடைக்கவில்லை. இதனால், மெட்ரோ நிலையங்களைக் கட்டுவது நடைமுறையில் சாத்தியமற்றது என்ற சவாலும் எழுந்துள்ளது.
போக்குவரத்து அமைப்பே சிறந்ததாம்
மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்டத்தில், தற்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்குப் பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பே மிகவும் பயனுள்ளதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மதுரைக்கான மெட்ரோ திட்டப்பரிந்துரை திருப்பி அனுப்பப்பட்டது" என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications