டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதாவையும், "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தையும் மீண்டும் முன்னெடுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் ரீதியாக ஆதரவை ஏற்படுத்தி பின்னர் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்த நிலையில்தான், தற்போது மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வரலாமா? என ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

திமுக, திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி
சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தோல்வியை தழுவியது. இதனால், திமுக இந்தியா கூட்டணியில் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸ் - திமுகவுடனான கூட்டணியை முறித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பலவீனம் அடையும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரலாம் என பாஜக நினைப்பதாக கருதப்படுகிறது.
அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என்று தனது கூட்டணி கட்சிகளிடம் பாஜக ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. பிற கட்சிகளையும் இந்த முயற்சியில் இணைக்க முடியுமா என்றும் பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். 2029 ஆம் ஆண்டில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும், 'தொகுதி மறுவரையறையை' எடுத்து முடித்தால் சாதகமாக இருக்கும் என பாஜக கருதுகிறதாம்.
2029-க்குள் நிறைவேற்ற..
அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடவடிக்கையும் 2029 க்குள் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்கள் விரும்புகிறார்களாம். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பின்னடைவை சந்தித்து இருப்பதால் இந்த சூழலை பயன்படுத்தி, இந்த முக்கிய மசோதாக்களை நிறைவேற்றலாம் என்று வியூகம் வகுத்து வருகிறதாம். அரசு தரப்பிலும் இந்த மசோதாக்களுக்கான ஆயத்தங்கள் தொடங்கிவிட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications