தமிழ் உட்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிடுவதற்கு எதிர்ப்பு- மத்திய அரசு மேல்முறையீடு
டெல்லி: மத்திய அரசின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA) தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கையில், சுற்றுச் சூழல் தொடர்பான அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகள், விரிவாக்கப் பணிகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு எதிராக சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா லாக்டவுன் காலத்திலும் நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சமூக வலைதளங்களிலும் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இது தொடர்பான வழக்கில் கடந்த ஜூன் 30-ந் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆக.11 வரை நீடிக்க வேண்டும்; மேலும் இந்த வரைவு அறிக்கையை தமிழ் உட்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications