விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி.. மத்திய அரசு போடும் புது பிளான்!
டெல்லி: விவசாயிகள் பாசனத்துக்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் கூறியுள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் அம்மாநில அரசுகளுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு வரி
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர். பாட்டில் இது குறித்து கூறுகையில், "தண்ணீர் வீணாவதைத் தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நீரைப் பெறுவார்கள். பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த நிலத்தடி தண்ணீர் பயன்பாட்டு அளவில் 83 சதவீதமாக இருக்கிறது.
நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க
இந்நிலையில், நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதையும், தண்ணீர் வீணாக்கப்படுவதையும் தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் 22 புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. பாசன நீருக்கு விதிக்கப்படும் வரியின் அளவை மாநில அரசுகளே முடிவு செய்யும். மத்திய அரசு இதற்காக ரூ.1,600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் அதிர்ச்சி
இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு தேவையான போதிய நீரை உறுதி செய்வதுடன், நீர் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நீர் மேலாண்மைக்கு உதவும் முயற்சியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டம் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு கூடுதல் செலவு சுமை ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இந்த வரி அதிக சுமையாக இருக்கலாம் என்று விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது இன்னும் தெரியவரவில்லை. இந்தத் திட்டத்தின் விவரங்கள் மற்றும் செயல்படுத்தல் முறைகள் குறித்து மாநில அரசுகளுடனான ஆலோசனைகளுக்கு பிறகு இன்னும் தெளிவாக தெரியவரும்.












Click it and Unblock the Notifications