"அந்தர் பல்டி!" வெறும் இரு நாட்களில் யூ-டர்ன்.. தேச துரோக வழக்கில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு
டெல்லி: தேச துரோக வழக்கு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில், மத்திய அரசு இரு நாட்களில் யூடர்ன் அடித்துள்ளது.
இப்போது நமது நாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்று தேச துரோக சட்டம். ஆங்கிலேய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், சுதந்திர இந்தியாவில் தேவையில்லை என்பது சமூக ஆர்வலர்களின் வாதமாக உள்ளது.
இதன் காரணமாகக் காலனித்துவ தேச துரோக சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

யூ-டர்ன்
கடந்த இரு நாட்களுக்கு முன்பு இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேச துரோக சட்டம் நாட்டில் தொடர வேண்டும் என்று வாதிட்ட மத்திய அரசு, இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனிடையே இரண்டு நாட்களில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் யூ-டர்ன் அடித்துள்ளது. அதாவது இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

புதிய பிரமாணப் பத்திரம்
பிரதமர் மோடியின் அறிவுறுத்தல் படி. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாணப் பத்திரத்தில், " நாட்டின் 75ஆவது சந்திர தினம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில், சட்டப் பிரிவு 124A, தேச துரோகச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது

பிரதமர் மோடி
தேச துரோக சட்ட விதிகள் குறித்து பிரதமர் மோடி முக்கிய கருத்துகளைக் கொண்டிருக்கிறார். சிவில் உரிமைகளைப் பாதுகாக்க என்றும் அவர் தயங்குவதில்லை. இது தொடர்பாக உரியக் குழு அமைக்கப்பட்டு சட்டம் மறுபரீசிலனை செய்யப்படும். இதன் காரணமாக இந்த மனுக்களில் உச்ச நீதிமன்றம் நேரத்தைச் செலவிடத் தேவையில்லை. காலனித்துவ பண்புகளை அகற்றுவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

உச்ச நீதிமன்றம்
அவர் பிரதமராகப் பதவியேற்றது முதல் 1,500க்கும் மேற்பட்ட பழங்கால சட்டங்கள் மற்றும் 25,000க்கும் மேற்பட்ட பழங்கால நடைமுறைகள் அகற்றப்பட்டுள்ளன" என்று அதில் கூறப்பட்டுள்ளன. நாடு முழுக்க தேச துரோகச் சட்டம் பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், மகாத்மா காந்தி போன்றோரின் வாயை அடைக்க ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய விதியை ஏன் இன்னும் ரத்து செய்யவில்லை என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது.

மத்திய அரசு வாதம்
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையில் தேச துரோகச் சட்டம் தேவை என்று குறிப்பிட்ட மத்திய அரசு, இது தொடர்பாகக் கடந்த 1962ஆம் ஆண்டு அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய தீர்ப்பையும் மேற்கொள் காட்டியது. இருப்பினும், இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சட்டம் தவறாகவே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்து. இந்தச் சூழலில் தான் வெறும் இரு நாட்களில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் நேர்மாறாக முடிவை எடுத்துள்ளது.

1962 தீர்ப்பு
கடந்த 1962ஆம் ஆண்டு தேச துரோக சட்டம் செல்லுபடியாகும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளை மட்டும் விதித்தது. அதன்படி வன்முறைக்கு அழைப்பு விடுக்காத வரை, அரசை விமர்சிப்பதைத் தேச துரோக குற்றமாகக் கருத முடியாது என்று கூறப்பட்டது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே அரசை விமர்சிப்பவர்களை ஒடுக்க இந்தச் சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications