நிமிஷாவுக்காக அவரது குடும்பம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.. மத்திய அரசு கறார்!
டெல்லி: ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிமிஷாவின் குடும்பத்தினர் தவிர பிறர் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்காது என்று மத்திய அரசு இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
'சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கைக் குழு' என்கிற அமைப்பு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தது. அதில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடமிருந்து மன்னிப்பை பெற தூதுக்குழு ஒன்றை ஏமனுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு தரப்பில், "ஏமனில் கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் மட்டுமே பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மன்னிப்புப் பெற முயற்சிக்க வேண்டும். மற்ற அமைப்புகள் தலையிடுவது பயனுள்ளதாக இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, "நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் வழக்கறிஞரை நியமித்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். வெளிப்புற தலையீடு தேவையில்லை. நல்லெண்ணத்துடன் வந்தாலும் அது சரியாக இருக்காது" என்று கூறியுள்ளார்.
'சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கைக் குழு' என்கிற அமைப்பு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ராகேந்த் பசந்த், மதகுரு காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் தலையீடு மரண தண்டனையை ஒத்திவைக்க உதவியது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோல ஏமனில் பயணத் தடை உள்ளதால், இந்திய அரசு சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும் என பசந்த் வலியுறுத்தினார்.
மேலும், "அரசாங்கம் அனுமதி அளித்தால், குழுவொன்று ஏமனுக்கு சென்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரை சந்திக்க முடியும். ஆனால் அரசாங்கத்தின் ஒப்புதல் இன்றி இது சாத்தியமில்லை" என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வெங்கடரமணி, "பல நாடுகளுக்கிடையேயான உறவுகள் தொடர்புடையதால் இது எளிதானது அல்ல. அரசாங்கம் சில அனுமதிகளை வழங்கலாம்; ஆனால் அது நடக்காவிட்டால் பிரச்சனை உருவாகும். அரசாங்கம் பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஒரு அமைப்பு அதை சிறப்பாக செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை" என்று ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே நிமிஷாவின் தாயார் நீதிமன்றத்தை அணுகியதால் அவருக்கு ஏமன் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பரவலாக குரல்கள் எழுந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications