சத்தீஸ்கர் முதல்வர் பதவி.. சீனியர் ரமண் சிங்கை ஓரம் கட்டும் பாஜக- ரேஸில் ஜெயிக்கிறாரா ரேணுகா சிங்?
டெல்லி: சத்தீஸ்கர் மாநில முதல்வர் பதவிக்கான போட்டியில் ரேணுகா சிங் வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றன டெல்லி தகவல்கள். டெல்லியில் இன்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவை ரேணுகா சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள். நவம்பர் 7-ந் தேதி முதல் கட்டமாக 20 தொகுதிகளிலும் 2-வது கட்டமாக நவம்பர் 17-ல் எஞ்சிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.

சத்தீஸ்கர் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே தெரிவித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக இருந்தன. சத்தீஸ்கரில் பாஜக 54 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி வெறும் 35 இடங்களில்தான் வென்றது. முந்தைய தேர்தலில் காங்கிரஸ் 68 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் யார் என்பதிடையே பாஜக தலைவர்களிடையே கடும் போட்டி நீடித்து வருகிறது. சத்தீஸ்கரில் 3 முறை முதல்வராக இருந்த ரமண் சிங், சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் தலைவர் விஷ்ணூ தேவ் சாய் மற்றும் மத்திய அமைச்சர் ரேணுகா சிங் ஆகியோர் இடையேதான் முதல்வர் பதவிக்கான போட்டி உருவாகி உள்ளது.
விஷ்ணு தேவ் சாய், சத்தீஸ்கரின் பழங்குடி தலைவர்களில் ஒருவர். 2014-ல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 2020 முதல் 2022 வரை சத்தீஸ்கர் பாஜக தலைவராகவும் இருந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவராக இருப்பவர் முன்னாள் முதல்வர் ரமண் சிங். 2004-ம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.வாக இருப்பவர். 1999-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராகவும் இருந்தார். சத்தீஸ்கரில் பாஜகவின் முகமாக இருந்தவர் ரமண் சிங்.
இந்த போட்டிகளில் தற்போது ரேணுகா சிங் வெற்றி பெறுகிறார் என்றே கூறப்படுகிறது. தற்போது சர்குஜா லோக்சபா தொகுதி எம்பியாக இருக்கிறார். இந்த லோக்சபா தொகுதிக்குட்பட்ட 11 சட்டசபை தொகுதிகளிலும் பாஜக வெல்ல காரணமாக இருந்தவர் ரேணுகா சிங். டெல்லியில் இன்று பாஜக தலைவர் ஜேபி நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து ரேணுகா சிங், சத்தீஸ்கர் முதல்வராக எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications