தலைவலி சீனா.. இப்போ புதுசா KJ-3000 எனும் பிரச்சனை! இந்தியா+அமெரிக்கா உஷார்
டெல்லி: சமீபத்தில் சீனா தனது 6வது தலைமுறை போர் விமானத்தை பரிசோதித்து பார்த்திருந்தது. இந்நிலையில், இதனை தொடர்ந்து KJ-3000 எனும் புதிய அதிநவீன விமானத்தையும் பரிசோதித்திருக்கிறது. தைவானுடன் போருக்கு ரெடியாகி வரும் சீனாவின் இந்த புதிய சோதனை, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, ஜப்பானுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ரக விமானம்: KJ-3000 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வகை விமானங்கள் அமெரிக்காவிடம் கூட இல்லை. மேலோட்டமாக சொல்வதெனில், இது மின்னணு கண்காணிப்பு விமானமாகும். டிசம்பர் இறுதியில் இந்த விமானம் குறித்து சோஷியல் மீடியாக்களில் சில படங்கள் ஷேராகி இருக்கின்றன. மற்றபடி சீனா KJ-3000 குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே விமானம் குறித்து விவரமான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

KJ-3000 என்ன செய்யும்: இந்த விமானத்தின் மேல் பகுதியில் குடை போன்ற அமைப்பு இருக்கும். இது குவிந்து இருக்காமல், டிஸ்க் போன்று இருக்கும். இதுதான் ரேடார் கருவி. போர் காலங்களில் எல்லை பகுதியில் உள்ள அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஆய்வு செய்ய இந்த விமானம் பயன்படுகிறது. செயற்கைக்கோளிலிருந்து தரைப்பகுதியை ஆய்வு செய்வதைவிடவும், சில ஆயிரம் அடி பறக்கும் விமானத்திலிருந்து ஆய்வு செய்வது எளிதானது. அதைத்தான் இந்த விமானம் செய்கிறது.
இந்த விமானத்திலிருந்து சொந்த நாட்டு போர் கப்பலுக்கும், போர் விமானங்களுக்கும் நிகழ்நேர தரவுகளை வழங்க முடியும். எனவே துல்லியமாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு தயாராக முடியும். இந்த விமானத்தைதான் சீனா டிசம்பர் இறுதியில் பரிசோதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தைவானுடன் பஞ்சாயத்து: இப்படியான நவீன விமானங்கள் தைவான் விஷயத்தில் சீனாவுக்கு நிச்சயம் பலன் கொடுக்கும். தைவான் தொடக்கத்தில் சீனாவின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் அமெரிக்காவின் தலையீடு காரணமாக, சுதந்திர நாடு என்கிற நிலைப்பாட்டிற்குள் நுழைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து ஒரு மாநிலம், சுதந்திர நாடு கோரினால் எப்படி இருக்குமோ? அதேபோலத்தான் தற்போது சீனாவும் கொந்தளிப்புக்கு சென்றிருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பானுக்கு சிக்கல்: இந்த கொந்தளிப்பில் இருக்கும்போது, தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் களம் இறங்கினால் சண்டை பலமாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தைவானுக்கு ஒன்று என்றால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என்று அமெரிக்கா கூறியிருந்தது. தைவானுக்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதோடு, நேட்டோவை கொண்டு வந்து நடு ரோட்டில் நிப்பாட்டவும் செய்யும். அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கும், கூட நிற்கும் ஜப்பானுக்கும்தான் சிக்கல் என்பதை KJ-3000 விமான சோதனை மூலம் சீனா தெரிவித்திருக்கிறது.
இந்தியாவுக்கு சிக்கல்: வான், கடற்படை மற்றும் தரைப்படையை இந்த KJ-3000 விமானம் ஒருங்கிணைப்பதால் லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் இது சவாலை ஏற்படுத்தும். ஏற்கெனவே கால்வான் எல்லை பகுதியில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இரு நாட்டு தரப்புக்கும் இடையே உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இப்போதும் கூட நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை. எனவே இந்தியாவுக்கு KJ-3000 விமானம் அச்சுறுத்தல்தான்.
உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-பாலஸ்தீன போர்கள் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் புதியதாக சீனா மற்றொரு போரை தொடங்கிவிடக்கூடாது என்பதே இப்போதைக்கு எல்லோருடைய வேண்டுதலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications