இந்தியா-சீனா இடையே.. இயற்கையான கூட்டணிக்கு சாத்தியமில்லை! - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர்
டெல்லி: அமெரிக்காவை எதிர்கொள்ள, சீனாவுடன் இந்தியா நெருக்கமாக உறவை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இயற்கையான கூட்டணிக்கு சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
ஒரு பாட்காஸ்ட் உரையாடலின்பொது அவர் இதை கூறியிருக்கிறார். அவர் பேசியதாவது, "அமெரிக்காவுடன் ஏற்பட்டிருக்கும் மோதல் காரணமாக, எல்லாவற்றையும் மறந்து சீனாவுடன் கூட்டணி வைத்துவிட முடியாது. ஏனெனில் இயற்கையாகவே இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டணிக்கு சாத்தியமில்லை.

அதற்காக சீனாவுடனான நட்பு முற்றிலும் சாத்தியமற்றது என்று கூறமுடியாது. இந்த நட்பு ஏற்பட பல ஆண்டுகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தேவைப்படும். நட்பு என்பது நீண்டகால நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கைகளிலிருந்தும், ஒருவருக்கொருவர் நல்லுறவு கொண்ட வரலாற்றிலிருந்தும் உருவாகிறது. சீனாவுடன் நாம் வலிமையான நண்பர்கள் என்று சொல்வதற்கு இன்னும் காலம் கனியவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற தளங்களில் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஒன்று சேர்வதற்கு காரணம், அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த ஒரு வித சங்கடமே.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல பொதுவான அம்சங்கள் உள்ளன. இரண்டுமே ஜனநாயக நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால ஒத்துழைப்பு உள்ளது. 1960களில் நம் மக்களுக்கு உணவு வழங்க அமெரிக்காவிலிருந்து வந்த தானியங்களை நினைவுகூருங்கள். மேலும், இன்று பல இந்தியர்கள் அமெரிக்காவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் உள்ளனர்" என்று கூறியிருந்தார்.
அப்போது, 'குறுகிய காலத்தில் அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளை ஈடுசெய்ய சீனாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை இந்தியா பயன்படுத்த முடியுமா?' என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன்,
"எந்தவொரு வர்த்தக உறவும் உருவாக சிறிது காலம் எடுக்கும். அமெரிக்கா வாங்க விரும்பாத பொருட்களை நாம் விற்க முயற்சிக்கிறோம். சீனாவும் அமெரிக்கா வாங்க விரும்பாத பொருட்களை விற்க முயற்சிக்கிறது. இந்த உறவுகளை ஏற்படுத்துவதற்கு சிறிது காலம் ஆகும், இது ஒரே இரவில் நடக்காது. இந்தியாவுக்கு சிறிய வாய்ப்புகள் இருக்கலாம். இந்திய இறால்களை சீனா வாங்குமானால், சிலவற்றை அனுப்ப வாய்ப்பு இருக்கலாம். ஆனால், உண்மையான தீர்வு அமெரிக்கா உடனான வர்த்தகத் தடைகள் குறித்த கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில்தான் உள்ளது.
இப்படி சொல்வதன் மூலம் சீனாவுடன் உறவே வேண்டாம் என்று சொல்லவில்லை. காலப்போக்கில் இரு நாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தடைகளை தளர்த்துவதில் இணைந்து செயல்பட்டால், இரு நாடுகளும் மாற்று வழிகளை உருவாக்கும். நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகப் போகிறோம். அவர்கள் இரண்டாவது, விரைவில் முதலாவது ஆகக்கூடும்" என்று பேசியிருக்கிறார்.
என்னதான் பொருளாதார நிபுணராக இருந்தாலும், சில விஷயங்களை ரகுராம் ராஜன் கவனிக்க தவறிவிட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். முதல் விஷயம் அமெரிக்க டாலர்தான். அது உலகின் மோனோபோலி கரன்சியாக இருக்கும் வரை, அமெரிக்கா நமக்கு அச்சுறுத்தல்தான். இரண்டாவது, சீனாவுடன் வர்த்தக உறவுகளை வளர்ப்பதன் மூலம் பிரிக்ஸ் அமைப்புக்குள் இந்தியா சொந்த கரண்சியில் வர்த்தகம் செய்ய முடியும். இதன் மூலம் ரூபாயின் மதிப்பு வலுவடையும். இப்படி இருக்கையில் ராகுராம் ராஜன் மேற்குறிப்பிட்டவாறு பேசியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications