லடாக் எல்லை விவகாரம் : சீனா முன்வைக்கும் யோசனை.. டெல்லியில் இரு நாட்டு அமைச்சர்கள் ஆலோசனை!
டெல்லி : லடாக்கில் உள்ள இந்தியா - சீனா கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், இந்தியா ரோந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என சீனா விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா வரும் நிலையில், லடாக் பிரச்சனை பற்றி முக்கிய ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் எழுந்தது.

இதஒயடுத்து, இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லையில் போர் பதற்றம் தணிந்தது. எனினும் லடாக் எல்லைப் பிரச்சனை இன்றளவும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் 18-வது சுற்று பேச்சுவார்த்தை லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்றது.
இந்தியா சார்பில் லெப்டினென்ட் ஜெனரல் ரஷிம் பாலியும், அவருக்கு இணையான சீன ராணுவ உயரதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது லடாக் எல்லைப் பிரச்சனையில் இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லைப் பகுதிகளில் அமைதியை மீட்டெடுக்க, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், லடாக் பகுதியில் நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து இரு தரப்பும் வெளிப்படையான விவாதத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உடனான சீனாவின் லடாக் எல்லை மேற்குப் பகுதியில் ஏற்கனவே இயல்பு நிலை திரும்பியுள்ளதாக சீனா கூறி வருகிறது. லடாக்கில் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் ரோந்துக்கு தடை விதிக்கப்பட்ட அதேபோன்ற பஃபர் சோன்களை உருவாக்க வேண்டும், சிக்கிம் உட்பட இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் ஃப்ளாஷ் பாயிண்டுகளை தவிர்க்கலாம் என சீனா யோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022 டிசம்பரில் அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் அருகே உள்ள யாங்சேயில், இரு நாடுகளுக்கு இடையேயான நடைமுறை எல்லையை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். அதேபோல, இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதற்காக மாண்டரின் மற்றும் திபெத்திய மொழிகளில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை சீனா மாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்பூ பங்கேற்கிறார். அப்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்துப் பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சனை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications