பல்டி அடித்த விமானப் போக்குவரத்து அமைச்சகம்.. 60% இலவச சீட் ஒதுக்கீடு தற்காலிக நிறுத்தம்!
டெல்லி: இந்திய விமான பயணிகளுக்கு கூடுதல் வசதிகளையும், வாய்ப்புகளையும் வழங்கும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் முக்கியமான விதிகளில் ஒன்றான விமானத்தில் 60% இருக்கைகளை எவ்விதமான கட்டணமும் இல்லாமல் பயணிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற திட்டத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வந்தது.
ஆனால் இந்த உத்தரவையும், அதை செயல்படுத்துவதையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அமைச்சகம். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக எழுந்த விமான நிறுவனங்களின் எதிர்ப்பும், செயல்பாட்டு சிக்கல்களும், வருமான பாதிப்பு தொடர்பான பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

விமான போக்குவரத்து இந்தியாவில் மிகவும் முக்கியமான பயண முறையாக மாறிவருவது மட்டும் அல்லாமல் சிறிய நகரங்களுக்கும் உதான் திட்டம் வாயிலாக விமான சேவை இயக்கப்படும் வேளையில் பயணிகள் எண்ணிக்கை கடந்த 5-10 வருடத்தில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விமான பயணிகளுக்கு ஏதுவான நடைமுறைகள் கொண்டு வரும் பொருட்டு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பைலட்களுக்கு ஓய்வு நேரம், குடும்ப உறுப்பினர்களுக்கு அருகில் இருக்கை முதல் ரீபண்ட் தொகை திருப்பி செலுத்துவது வரையில் மாற்றங்கள் நடந்து வருகிறது.
இப்படி மார்ச் 17ஆம் தேதி வெளியிடப்பட்ட விமான போக்குவரத்து அமைச்சக அறிவிப்பில், ஒவ்வொரு விமானப் பயணத்திலும் குறைந்தது 60% இருக்கைகளை கூடுதல் கட்டணம் இன்றி பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த புதிய விதிமுறையின் அடிப்படை நோக்கம் என்னவென்றால் பயணிகளுக்கு இருக்கை தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரவும், இருக்கை தேர்வுக்கு அதிகப்படியான கட்டணும் வசூலிக்கப்படுவது தொடர்பாக வந்த புகார்களை தீர்க்கும் வகையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.
ஆனால், ஏப்ரல் 2ஆம் தேதி மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் DGCAக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த விதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்ததுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, பல்வேறு தரப்புகளின் கருத்துகளை ஆய்வு செய்த பின்னர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விமான நிறுவனங்களின் எதிர்ப்பு
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், விமான நிறுவனங்களின் வருவாய் அமைப்பில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று விமானத் துறையினர் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், இந்த விதி விமான செயல்பாட்டில் சிக்கல்கள் உருவாக்கும் என்றும், வர்த்தக ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தன. குறிப்பாக குறைந்த கட்டண சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இது அதிக சுமையாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.
பயணிகள் வசதிகள்
இந்த 60% இலவச இருக்கை விதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் மற்ற விதிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புகளில் பயணிகளுக்கான இருக்கை ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை, கூடுதல் கட்டண விவரங்களை விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தெளிவாக அறிவித்தல், குடும்ப உறுப்பினர்கள் ஒரே இடத்தில் அமர ஏற்பாடு, இசைக்கருவிகள், செல்லப்பிராணிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு செல்லும் விதிமுறைகள் போன்றவை தொடரும்.
தற்போது இந்த விதி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், முழுமையான ஆய்வு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். விமான பயணிகள் மற்றும் துறையினர் இருவருக்கும் ஏற்ற வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படுமா என்பது அடுத்த கட்டத்தில் தெளிவாகும்.












Click it and Unblock the Notifications