ஆபரேஷன் ஷீல்டு! பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில்.. இரவு நேரத்திலும் நடந்த பாதுகாப்பு ஒத்திகை
டெல்லி: பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் சனிக்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஆபரேஷன் ஷீல்டு என்ற பெயரில் நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையின் போது பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அவசர காலத்தில் காயம் அடைந்தவர்களை எப்படி மீட்பது? என்பது உள்ளிட்ட பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் மீது தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது. பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதில் 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து, ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்திய எல்லையில் உள்ள குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதுமட்டும் இன்றி டிரோன் மூலமாகவும் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக வெற்றிகரமாக முறியடித்தது. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் என்பதை யூகித்துக்கொண்ட இந்தியா, நாடு முழுவதும் போர் ஒத்திகை நடத்தியது.
நேற்று போர் ஒத்திகை நடந்தது
அவசர கால சைரன்கள் ஒலிக்க விடுவது, மின்சாரம் தடை செய்து மக்களை அலர்ட் செய்வது, தாக்குதல் நடத்தப்பட்டால் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சனிக்கிழமை (மே 31) பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், சைரன் ஒலி சரியாக செயல்படுகிறதா? தீயணைப்புத்துறை, மீட்புப் படையினர் மற்றும் ஆபத்து காலங்களில் மக்களை மீட்பதற்கான திட்டங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. சண்டிகர், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் இரவு சுமார் 10 நிமிடங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
ஆபரேஷன் ஷீல்டு ஏன்?
அவசர காலங்களில் பாதுகாப்பு படையினர் விரைந்து செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன. ஆபரேஷன் ஷீல்டு என்ற பெயரில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலை சமீபத்தில் நாம் பார்த்தோம். இத்தகைய நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications