"குவியும் நீட் கேஸ்கள்.. மருத்துவ கல்வி முறையில் மாற்றம் தேவை என தோன்றுகிறது!" தலைமை நீதிபதி கருத்து
நீட் வழக்குகள் தொடர்பாகத் தலைமை நீதிபதி சந்திரசூட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
டெல்லி: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், நீட் தேர்வு வழக்குகளைப் பார்க்கும் போது மருத்துவ கல்வி முறையில் மாற்றம் தேவை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் நீட் மூலமே தேர்வை அடிப்படையாகக் கொண்ட மருத்துவ கல்விக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இருப்பினும், நீட் முறைக்குத் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவர்கள் மருத்துவம் பயில்வதைக் கடினமாக்குவதாகவும் கூறி பலரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல வழக்குகளும் சுப்ரீம் கோர்டில் தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீட் மற்றும் மருத்துவ சேர்க்கை தொடர்பான அதிகளவில் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளதாகவும் இது மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களின் அவசியத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நீட் தேர்வு, தற்போதுள்ள மருத்துவ சேர்க்கை முறைக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. எனது அமர்விலேயே பல வழக்குகள் உள்ளன.

நீட் வழக்குகள்
நீட் தேர்வு வழக்குகளைப் பார்க்கும் போது மருத்துவ கல்வி முறையில் மாற்றம் தேவை என்று தோன்றுகிறது. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாதுதான்.. இருப்பினும், மாணவர்கள் நலன் கருதி, அவர்கள் சொல்வதைக் கேட்பது அரசின் கடமையாகும். அநீதி இழைக்கப்படும் போதெல்லாம், தலையிடுவது நமது கடமையாகும். நீட் தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்படுவது மாணவர்களின் எதிர்காலத்தைக் குறிக்கிறது. நமது நாட்டில் அனைவராலும் விரும்பி படிக்கப்படும் படிப்புகளில் ஒன்றாக மருத்துவம் இருக்கிறது என்பதற்கு இது சான்றாகும்.

மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள்
இந்தியாவில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை உணர்த்தும் வகையிலேயே இந்த வழக்குகள் உள்ளன" என்று அவர் தெரிவித்தார். கடந்த பல ஆண்டுகளாக நீட் தேர்வுகள் ஒத்திவைப்பு, கவுன்சிலிங், இட ஒதுக்கீடு நிர்ணயம், சேர்க்கை சர்ச்சை என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இப்போதும், நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்ற பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழ்நாடு அரசும் நீட் விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக ஏற்றத்தாழ்வுகள்
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "நீதியின் கொள்கைகள் தான் சட்ட மற்றும் மருத்துவத் தொழில்களுக்கு வழிகாட்ட வேண்டும்.. ஏனென்றால் இந்த இரு துறைகளும் நேர்மை, சமத்துவம் மற்றும் சமூக நலனின் அக்கறை கொண்டு இருக்கிறது. சட்டத்தில், மக்கள் அனைவரும் நியாயமாக நடத்தப்பட வேண்டும். அதேபோல சுகாதாரத்தில் அனைத்து மக்களுக்கும் சமமான சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியாவில் வளர்ந்து வரும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் விளிம்புநிலை மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கிறது. ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் சுகாதாரப் பாதுகாப்பை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.

அநீதி
ஒருவரின் வகுப்பு, சாதி, பாலினம், இருக்கும் இடம் எனச் சுகாதார அமைப்புக்கு வெளியே உள்ள காரணிகளும் கூட தனிநபரின் சுகாதார நிலையைத் தீர்மானிக்கிறது. மக்களின் சமூக நிலையை வைத்து அவர்களின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் முறையே இங்குச் சுகாதாரப் பாதுகாப்பில் எந்தளவுக்கு அநீதி இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு குடும்பத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைகள் மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.. காசநோய் பாதிப்பு ஏழைகள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், சிகிச்சையின் போது காசநோயால் இறக்கும் ஆபத்து மூன்று மடங்கு அதிகமாகும். இது சமத்துவமின்மையின் பிரதிபலிப்பாகும். சமூக வேர்களை புறக்கணிப்பது சுகாதார அமைப்பின் செயல்திறனை முடக்குகிறது..

சுகாதார அமைப்பு
சமத்துவம் மற்றும் நியாயம் சுகாதார அமைப்பில் இருக்க வேண்டும். அதாவது அனைத்து நபர்களுக்கும் சுகாதாரத் துறையில் நியாயமான மற்றும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும். அதேபோல சுகாதாரப் பாதுகாப்பு நீதியின் மற்றொரு விஷயம் மருத்துவர்கள் மற்றும் நோயாளி இடையேயான உரையாடல் நேர்மையானதாக இருக்க வேண்டும், மருத்துவ சேவையில் ஏற்படும் அநீதிக்கு எதிராகப் பொதுமக்களின் கோபத்தைப் பார்க்க முடிகிறது. ஒரு நோயாளி மருத்துவர் தவறாகச் சிகிச்சை வழங்கும் நபராகக் கருதும்போதும் அல்லது ஒரு மருத்துவர் நோயாளியை வெறும் நோயாளியாகப் பார்க்கும்போது கோபம் அதிகரிக்கிறது. இது தீர்க்கப்பட வேண்டிய மருத்துவ பிரச்சினை.

மோதல்கள்
சுகாதாரத் துறையில் இருக்கும் இந்த மனிதாபிமானமற்ற தன்மை அடிக்கடி பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையே வன்முறை மோதல்களை ஏற்படுத்துகிறது.. மருத்துவர்கள் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். இது சுகாதார ஊழியர்களை ஆபத்தான நிலையில் தள்ளுகிறது. இந்த வன்முறை மருத்துவ சேவைகளை வழங்குவதில் இடையூறாக முடிகிறது.. இது நோயாளிகளுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மருத்துவ வசதி
மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகும். இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்த ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். சுகாதார வல்லுநர்கள், சமூகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் இணைந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சமமான மருத்துவ அணுகலைத் தருவது காலத்தின் தேவை" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications