அமித்ஷா உத்தரவு போட.. அதை அப்படியே கேட்கிறார் தலைமை தேர்தல் ஆணையர்! - CJP அட்டாக்
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் என்பது ஒரு தன்னிச்சையான அமைப்பு. அதன் தலைமை ஆணையர் சுதந்திரமாக செயல்பட வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்படுகிறார் என்று காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சரமாரியாக குற்றம் சாட்டியிருக்கிறது.
சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை (SIR) பணிகளில், தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைக்கு, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னிச்சையாக லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், சேர்க்கும் பணிகளையும் ஞானேஷ் குமார் செய்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த CJP தலைவர்கள், ஞானேஷ் குமார் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் இதை செய்யவில்லை எனில் நாடு தழுவிய போராட்டங்கள் நடக்கும் என்று எச்சரித்தனர். அதேபோல ஜனநாயகப்பூர்வமாக.. சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஞானேஷ் குமார், அமித்ஷாவின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஞானேஷ் குமார் மீது விமர்சனங்களை வைக்கும்போதும், தேர்தல் ஆணையத்திடம் கேள்விகளை எழுப்பும்போதும், அதற்காக பதிலளிக்க பாஜகவின் சம்பித் பத்ரா ஓடி வருகிறார். இவர் என்ன தேர்தல் ஆணையத்தை சேர்ந்தவரா? அல்லது.. ஞானேஷ் குமார் என்ன பாஜகவை சேர்ந்தவரா? என்று கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர்.
மேலும் CJP தலைவர்கள் பேசியதாவது, "வரவிருக்கும் அனைத்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களையும் நிறுத்திவைக்க வேண்டும். ஞானேஷ் குமார் மற்றும் அவருக்கு உத்தரவிட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். SIR நடைமுறையை ரத்து செய்து, 2025-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும். SIR தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்று, உச்ச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் இல்லையெனில், அவை தீ விபத்தில் அழிந்துவிட்டதாக அவர்கள் கூறக்கூடும்.
ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, பல மாநிலங்களில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட பாஜகவால் இத்தகைய வாக்கு சதவீதத்தைப் பெற முடியவில்லை. மோடியால் கூட எட்ட முடியாத வாக்கு சதவீதத்தை, பாஜகவுக்குப் பெற்றுத் தருவதற்காக ஞானேஷ் குமார் கடுமையாக உழைத்துள்ளார்" என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை CJP தலைவர்கள் முன் வைத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
