ராணுவத்துக்கே தகுதியற்றவர்.. மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறிஸ்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் - உறுதிசெய்த உச்சநீதிமன்றம்
டெல்லி: கிறிஸ்தவர் என்பதால் மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்த ராணுவத்தின் லெப்டினன்ட் அதிகாரி சாமுவேல் கமலேசன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சாமுவேல் கமலேசன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அவரது பணி நீக்கத்தை உறுதி செய்து உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, ‛‛ராணுவ அதிகாரியாக இருப்பவர் இப்படி செய்தால் என்ன செய்வது?. அவர் ராணுவத்தில் பணியாற்றவே தகுதியவற்றவர்'' என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
நம் நாட்டின் ராணுவத்தில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர் சாமுவேல் கமலேசன். இவர் கடந்த 2017 ம் ஆண்டில் சீக்கிய படைப்பிரிவில் (Sikh squadron)நியமனம் செய்யப்பட்டார். இந்த படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் கோவில் மற்றும் குருத்வாரா உள்ளது.

இங்கு வீரர்கள் பங்கேற்கும் மதம்சார்ந்த வழிபாடு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் அதிகாரி சாமுவேல் கமலேசன் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி ரெஜிமன்ட்டின் கட்டாய அணிவகுப்பின்போது கோவிலுக்குள் அவர் நுழைய மறுத்தார். அதுமட்டுமின்றி நான் கிறிஸ்தவர். இதனால் உள்ளே செல்வது என மதநம்பிக்கைக்கு எதிரானது. அதேபோல் வேற்று மதத்தை சேர்ந்தவன் என்பதால் நான் உள்ளே செல்ல மறுப்பது யாரையும் காயப்படுத்தாது என்று விளக்கமும் கொடுத்தார்.
சாமுவேல் கமலேசன் கிறிஸ்தவர் மதத்தை சேர்ந்தவர். இதனால் அவர் மறுத்துள்ளதோடு சர்ச் இல்லை என்று அவர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை பாய்ந்தது. ராணுவ ஒழுங்கு விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சாமுவேல் கமலேசன் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணி நீக்க நடவடிக்கை கடந்த 2021ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம் அவரது பணி நீக்கம் சரியே எனக்கூறி உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சாமுவேல் கமலேசன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மாலா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவரது பணி நீக்கத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உத்தரவிட்டது. இதுபற்றி தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ‛‛ஒரு ராணுவ அதிகாரியாக இருந்து கொண்டு அவர் இப்படி செய்தால் என்ன செய்வது?. மேலும் அவருக்கு கீழ் பணியாற்றும் வீரர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக இது இல்லையா? என்று கேள்வி எழுப்பியது.
மேலும் இன்றைய விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛கோவில் மற்றும் குருத்வாரா உள்ளதால் செல்ல மறுத்துள்ளீர்கள் என்று வைத்து கொண்டால் அது பிற வீரர்களின் உணர்வுகளை புண்படுத்துவதற்கு சமமாகாதா?'' என்று கேள்வி எழுப்பினார். மேலும் ‛‛இத்தகைய செயல் இந்திய ராணுவத்துக்கு பொருத்தமற்றவராக ஒருவரை மாற்றி விடுகிறது. ராணுவம் என்பது மதசார்பற்றது. இதனால் இந்த நிலைப்பாட்டை வேறு எங்காவது செயல்படுத்தி இருக்கலாம். ராணுவ விதிகளை மீறியதாவும், பிற வீரர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்'' எனக்கூறினார்.
அப்போது மனுதாரர் சாமுவேல் கமேலசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ‛‛பைபிளின் முதல் கட்டளையில் எனக்கு முன் வேறு கடவுள்கள் இருக்க கூடாது என்று உள்ளது'' என்றார். இதற்கு உச்சநீதிமன்றம், ‛‛அது நம்பிக்கைக்கான அம்சம் மட்டுமே. போதகரும் ஆலோசனைகளை வழங்கி உள்ளார். மேலும் ராணுவ சீருடையில் இருக்கும்போது மதம் என்ன சொல்கிறது என்பதை பற்றிய தனிப்பட்ட புரிதல் தேவையில்லை'' எனக்கூறிய உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்து பணி நீக்க உத்தரவை உறுதி செய்தது.












Click it and Unblock the Notifications