திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு.. இந்தி பேசும் மாநிலங்கள் அவமதிப்பு.. பிரதமர் மோடி கடும் அட்டாக்!
டெல்லி: திமுக எம்பி செந்தில் குமார் இந்தி பேசும் மாநிலங்கள் குறித்து கூறிய வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்தி பேசும் மாநிலங்களை காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் அவமதிப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 3 ஆம் தேதி எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானாவில் மட்டுமே ஆட்சி கிடைத்தது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது. இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வட மாநிலங்களில் பாஜகவின் மவுசு குறையமால் இருப்பதையே நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு காட்டுவதாக பாஜக ஆதரவாளர்கள் பேசிவருவதைக் காண முடிகிறது. பாஜக மீது விமர்சனம்: அதேவேளையில், சத்தீஷ்கரில் ஆட்சியை தக்க வைக்கலாம் என பெரிதும் நம்பிய காங்கிரஸ் கட்சிக்கு அங்கும் தோல்வி கிட்டியது.
மாட்டு சிறுநீர்: குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறுகிறது என்று பேசினார். மேலும், இந்தி பேசும் மாநிலங்களை மாட்டு மூத்திரங்கள் (Gau Mutra) என்று விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடி கடும் விமர்சனம்: திமுக எம்.பி பேசுகையில், "இந்தி பிரதானமாக பேசப்படும் மாநிலங்களில் வெல்வதுதான் பாஜகவின் பலமாக உள்ளது. இந்த மாநிலங்களை நாங்கள் பொதுவாக கவ் மூத்ரா என்று சொல்வோம்" என்றார். செந்தில் குமாரின் இந்த பேச்சு சர்ச்சையாக வெடித்தது. அவருடைய பேச்சுக்கு கடும் விமர்சனங்களும் எழுந்தன. பிரதமர் மோடியும் இது தொடர்பாக கடுமையாக சாடியுள்ளார்.
பிரதமர் மோடி கூறுகையில், "மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் இந்தி பேசும் மாநிலங்களை அவமதிக்கிறார்கள். வடக்கு - தெற்கு என பிரிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவுகு எதிராக பலரும் இந்தி பேசும் மாநிலங்களை மதவெறியர்கள், படிப்பறிவற்றவர்கள், பாசிஸ்டுகள் என விமர்சிக்கிறார்கள்.
வருத்தம் தெரிவித்த செந்தில் குமார்: பாஜகவை விமர்சிப்பதால் தென் இந்திய வாக்காளர்கள் அறிவர்ந்தவர்கள் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள்" என்றார். திமுக எம்.பி செந்தில் குமார், இப்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது முதல் முறையல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டும் தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசும் போது, இந்தி பேசும் மாநிலங்களை கவ் மூத்ரா என்று பேசியிருந்தார். இந்த நிலையில், மாட்டு சிறுநீர் குடிக்கும் மாநிலங்களில்தான் பாஜக ஜெயிக்கும் (பாஜக) என்ற தமது பேச்சுக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் திமுக எம்பி செந்தில் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்பி செந்தில் குமார் தனது, எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டாக்டர் செந்தில் குமார் எம்பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications