இதெல்லாம் கவனிச்சீங்களா? ஜனநாயகத்திற்கு ஆபத்தான அறிகுறிகள்! லிஸ்ட் போட்டு பாஜகவை சாடிய காங்கிரஸ்
டெல்லி: இன்று இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தேர்தல் தொடங்கியதிலிருந்து ஜனநாயகத்திற்கு ஆபத்தான அறிகுறிகள் ஏராளமானவை தென்பட்டு இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் தொடங்கியதிலிருந்து ஜனநாயகத்திற்கு ஆபத்தான அறிகுறிகள் தென்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,
"சூரத் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய பாஜக சூழ்ச்சி செய்தது. மற்ற வேட்பாளர்களை மிரட்டியது. கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் தேர்தலில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இங்கு வாக்குப்பதிவு 0%. காரணம் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பை (ENPO) தேர்தல்களில் இருந்து வாபஸ் பெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தும், அந்த அமைப்பை பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்திட மத்திய உள்துறை அமைச்சகத்தால் முடியவில்லை. இதில் அமைச்சகம் தோல்வியடைந்துள்ளது. கடந்த 1963ல் நாகலாந்து மாநில அந்தஸ்து பெற்ற பிறகு, இவ்வளவு மக்கள் வாக்களிக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
உள் மணிப்பூர் லோக்சபா தொகுதியில் கைகளில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 47 வாக்குச்சாவடிகள் இதனால் பாதிக்கப்பட்டது. ஆனால், வெறும் 11 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறு தேர்தல் நடத்தப்பட்டது.
இன்று அவுட்டர் மணிப்பூர் லோக்சபா தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட உக்ருல் மாவட்டத்தில் வாக்காளர்கள் பாஜகவின் கூட்டணிக் கட்சியான NPFக்கு மட்டுமே வாக்களிக்க கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நமது ஜனநாயகம் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டபோதும் கூட பாதுகாப்புப் படையினர் அங்கு அமைதியாக நின்றனர்.
பிரதமர் மிகவும் வெட்கக்கேடான, பொய்யான வகுப்புவாதப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் ஆணையத்திடம் இதற்கு எந்த எதிர்வினையும் வரவில்லை. கஜுராஹோ லோக்சபா தொகுதியில் இந்தியக் கூட்டணியின் வேட்பாளர் மீரா யாதவின் வேட்புமனு நிராகரிக்கப் பட்டிருக்கிறது. ஆட்சி அதிகாரத்தை காப்பாற்ற ஜனநாயகத்தையே கொன்றுவிட்டனர். இது நம் வாழ்நாளில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தக்கூடிய தேர்தல்" என விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications