காணாமல் போகும் காங்கிரஸ்.. டெல்லியில் ஹாட்ரிக் ஜீரோ! ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை
டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இப்போது தொடங்கி நடந்து வருகிறது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்தமாகத் தலைநகர் டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது பரிதாபமான சூழலில் இருக்கிறது. கடந்த 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாத நிலையில், இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றம் தொடர்கிறது.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த 9 ஆண்டுகளாக அங்கு கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சூழலில், இப்போது அதிஷி முதல்வராக இருக்கிறார்.

இந்தத் தேர்தலில் கெஜ்ரிவால் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை டெல்லியில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது.
டெல்லி தேர்தல்:
டெல்லியைப் பொறுத்தவரை அங்குச் சுதந்திரத்திற்குப் பிறகு நேரடியாகக் குடியரசுத் தலைவர் ஆட்சியில் தான் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு 1993ம் ஆண்டு தான் அங்கு முதல் சட்டசபைத் தேர்தல் நடந்தது; பாஜக வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில், மதன் லால் குரானா முதல்வரானார். 5 ஆண்டுகளில் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். 1998 தேர்தலுக்கு முன்பு 52 நாட்கள் சுஷ்மா சுவராஜ் முதல்வராக இருந்தார்.
ஆனால், அதன் பிறகு 1998ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. அப்போது முதல் 15 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே தொடர்ந்தது. அக்கட்சியின் மூத்த பெண் தலைவரான ஷீலா தீட்சித் டெல்லியில் காங்கிரஸை வளர்த்தெடுத்தார். அசைக்கவே முடியாத கோட்டையாக மாற்றிக் கட்டினார். 1998ல் காங்கிரஸுக்கு டெல்லியில் உள்ள 70 இடங்களில் 52இல் வென்றிருந்தது. அடுத்தடுத்து இரு தேர்தல்களில் காங்கிரஸின் சீட்கள் குறைந்தாலும் கூட ஆட்சியைத் தக்கவைக்க வைத்துக் கொண்டன.

பின்னடைவு:
ஆனால், 2013ல் நடந்த தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்தது. ஆளும் கட்சியாகத் தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அந்தத் தேர்தலில் வெல்ல முடிந்தது. குறிப்பாக 15 ஆண்டுகளாக டெல்லியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை ஆம் ஆத்மியின் தலைவர் கெஜ்ரிவால் வீழ்த்தினார். இது அனைவருக்குமே அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.

2013ல் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தது. ஆனால், சில மாதங்களிலேயே கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் நிலவிய சூழலில் ஆம் ஆத்மி கூட்டணியை முறித்துக் கொண்டது. இதையடுத்து 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் தான் காங்கிரஸ் டெல்லியில் இருந்து மொத்தமாகக் காணாமல் போனது. அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. 2020 தேர்தலிலும் இதே நிலை தான் தொடர்ந்தது.
ஹாட்-டிரிக் ஜீரோ
2013 வரை ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் அடுத்த சில ஆண்டுகளில் காணாமல் போய் இருக்கிறது. இப்போது கூட ஆம் ஆத்மி மீது அதிருப்தி உள்ள சூழலிலும், அந்த வாக்குகள் பாஜக பக்கமே சென்றுள்ளது. மக்களின் நம்பிக்கையைக் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. இந்தத் தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
கடந்த காலங்களில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை
- 1993- 14 தொகுதிகள்
- 1998- 52 தொகுதிகள்
- 2003- 47 தொகுதிகள்
- 2008- 43 தொகுதிகள்
- 2013- 8 தொகுதிகள்
- 2015- 0 தொகுதிகள்
- 2020- 0 தொகுதிகள்












Click it and Unblock the Notifications