நேஷனல் ஹெரால்டு வழக்கு.. 3 மணி நேர விசாரணை! அமலாக்க துறை இயக்குநரகத்திலிருந்து வெளியே வந்த சோனியா
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு ஆஜராகிய நிலையில் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை முடிந்தது.
நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஆகியோ பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

இதில் பண மோசடி நடைபெற்றதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
வழக்கு விசாரணைக்கு கடந்த ஜூன் 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் பூரணமாக குணமாகும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
Recommended Video
இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டது. ஜூலை 21 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்ற சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் இயக்குநரகத்தை விட்டு வெளியே வந்தார்.
அமலாக்கத் துறை இயக்குநரகத்தை தவறாக கையாள்வதை நிறுத்தக் கோரி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது புனையப்பட்ட வழக்கு என கூறி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications