“காங்கிரஸின் முழு தோல்வி இது..” பீகார் தேர்தல் குறித்து.. உடைத்து பேசிய காங். தலைவர்!
டெல்லி: பீகார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்த தோல்விக்கு காரணம் காங்கிரஸ்தான் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நிகில் குமார் கூறியிருக்கிறார்.
"இது எங்கள் அமைப்பின் பலவீனத்தை காட்டுகிறது. எந்தத் தேர்தலிலும் ஒரு அரசியல் கட்சி அதன் அமைப்பு பலத்தையே நம்பியுள்ளது. அமைப்பு பலவீனமாக இருந்து திறம்பட செயல்படவில்லை என்றால், ஒட்டுமொத்த பலனும் பாதிக்கப்படும். எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் திறமையானவர்கள்தான், ஆனால் இன்னும் சிறந்த வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார்.

அதேபோல பீகார் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சத்யேந்திர நாராயண் சின்ஹாவின் மகனும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான ஆனந்த், காங்கிரஸ் தோல்வி குறித்து கூறுகையில், "அமைப்பு திட்டமிட்டபடியும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு, அனைத்து தொகுதிகளிலும் வலுவான இருப்பை உறுதி செய்திருக்க வேண்டும். இது அமைப்பின் முழுமையான தோல்வி. எங்கள் அமைப்பு வலுவாக இருந்திருந்தால், எங்கள் வேட்பாளர்களின் வெற்றி வேறுபட்டிருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
காங்கிரஸ் எம்பி சசிதரூர், "தேசிய ஜனநாயகக் கூட்டணி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவிக்கும் வரை காத்திருப்போம். தோல்விக்கான காரணங்களை ஆராய்வது கட்சியின் பொறுப்பு. ஆனால் நாங்கள் கூட்டணிக்கு தலைமை வகிக்கவில்லை என்பதையும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அதன் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற ஒரு விஷயத்தில், எங்கள் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் ஆராய்வது முக்கியம். நான் அங்கு இல்லை, பீகாரில் பிரச்சாரம் செய்ய நான் அழைக்கப்படவில்லை. எனவே தனிப்பட்ட அனுபவத்தில் அதிகம் கூற முடியாது. அங்கு இருந்தவர்கள் நிச்சயமாக முடிவுகளை ஆய்வு செய்வார்கள்" என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல், "உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. பழி சுமத்த கூடாது, சுயபரிசோதனை வேண்டும், உள்ளே இருந்து பார்த்து உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. நூற்றுக்கணக்கான விசுவாசமான களப் பணியாளர்கள், கட்சியின் வெற்றிக்கு எவ்வளவு காலம் காத்திருப்பார்கள்? ஆனால், யதார்த்தத்தைப் பற்றி துளியும் அறியாத சிலரின் கைகளில் அதிகாரம் குவிக்கப்பட்டதால், மீண்டும் மீண்டும் தோல்விகளையே சந்திக்கிறோம்.
அதிகாரம் பெற்ற சிலரே மீண்டும் மீண்டும் அனைத்தையும் பெறுகிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் கட்டுப்பாடு மற்றும் அதிகாரத்தால் தங்களை தவிர்க்க முடியாதவர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications