அனல் பறக்க போகுது.. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு.. காங்கிரஸ் அதிரடி!
டெல்லி: இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடந்தது. டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 240 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்கள் வென்றது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. எதிர்க்கட்சி தலைவராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எகிறியது. இது தொடர்பாக தொடர் ஆலோசனைகளை காங்கிரஸ் கட்சி நடத்தியது. இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடந்தது. டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடந்த இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மிக முக்கியம் என்பதால் ராகுல் காந்தி அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கேபினட் அந்தஸ்து பெற்றது.
லோக்சபாவில் பாஜகவிற்கு இந்த முறை தனிப்பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சிகள் விவாதங்களின் போது கடும் நெருக்கடி கொடுக்க வியூகம் வகுத்து வருகின்றன. இந்த நிலையில் தான், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவருக்கான அதிகாரங்கள்: லோக்சபா எதிர்க்கட்சி தலைவருக்கு கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்து உண்டு. நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் முக்கிய குழுக்களின் உறுப்பினராகவும் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெறுவார். அதாவது, பொதுக் கணக்கு, பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சி தலைவர் இருப்பார்.
அது மட்டும் இன்றி சுதந்திரமான அமைப்புகளான சிபிஐ, மத்திய தகவல் ஆணையம், மனித உரிமை ஆணையம், லோக்பால் உள்ளிட்டவற்றின் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் குழுவிலும் எதிர்க்கட்சி தலைவர் இடம் பெற்றிருப்பார். எதிர்க்கட்சி தலைவருக்கென தனி வீடு ஒதுக்கப்படும். அதற்கு வாடகையோ, பராமரிப்புத் தொகையோ செலுத்த வேண்டியதில்லை. இது போக பல்வேறு சலுகைளும் எதிர்க்கட்சி தலைவருக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications