மோடிக்கு பிரச்சாரத்தில் பேச வேறு எதுவுமே இல்ல.. அதனால்தான் இப்படி பேசுகிறார்.. கார்கே கொந்தளிப்பு
டெல்லி: இந்துக்களின் சொத்துகளை காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடும் என பிரதமர் மோடி பேசியது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பேசுவதற்கு எதுவுமே இல்லாததால் காங்கிரஸை பிரதமர் விமர்சித்து வருவதாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் நிறைவடைய இருக்கும் நிலையில் 18வது மக்களவையின் 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து இந்திய கூட்டணி என்ற பெயரிலும் களம் காண்கிறது.
பிரசாரம்: தமிழகம் உள்ளிட்ட 100 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்த கட்ட தேர்தலை சந்திக்க தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன பிரதமர் நரேந்திர மோடியும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இதனை ராஜஸ்தானில் நடந்த பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இந்தியாவில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதமர் மோடி: ராஜஸ்தானில் பேசிய பிரதமர்” 'அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டு வைக்காது." என பேசியிருந்தார்.
கடும் விமர்சனம்: பிரதமர் மோடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடியின் பேச்சு அப்பட்டமான மத வெறுப்பு பிரச்சாரம் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் மத ரீதியாகவோ இன ரீதியாகவோ சாதி ரீதியாக பேசி வாக்குகள் சேகரிக்க கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. இதனால் பிரதமர் மோடி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்திருக்கிறது.
கண்டனம்: இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், தைரியம் இழந்து, பேசுவதற்கு எந்தப் பிரச்னையும் இல்லாதவர், இதுபோன்ற விஷயங்களைச் சொல்கிறார். NREGA, உணவுப் பாதுகாப்பு பற்றி பேசினாரா? அவர் எதுவும் சொல்ல முடியாது, அவர் எப்போதும் காங்கிரசையும், எதிர்க்கட்சிகள் மீது வன்மத்தை கக்கி வருகிறார்" என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications