5 மாடி கட்டடம் .. டெல்லியில் காங்கிரஸின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த சோனியா.. ஸ்பெஷல் என்ன?
டெல்லி: அதிநவீன வசதிகளுடன் கடந்த 15 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தை டெல்லியில் இன்று சோனியா காந்தி திறந்து வைத்தார். ‛இந்திரா பவன்' என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் தரைதளம் + 5 மாடி கட்டடமாக உள்ளது. இதில் உள்ள வசதிகள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் பழமையான கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சி தான். இந்த கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. டெல்லியில் 24, அக்பர் ரோடு என்பது தான் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக உள்ளது.

இந்த அலுவலகத்தின் வளாகம் என்பது சிறியதாக உள்ளது. இதனால் அதிகமான தொண்டர்கள் கூடும்போதும், முக்கியமான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தும்போதும் இடநெருக்கடி என்பது ஏற்படும்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் கோட்லா சாலையில் உள்ள 9 ஏ என்ற இடத்தில் புதிதாக கட்சி தலைமை அலுவலகம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி ஆகியோர் சேர்ந்து அடிக்கல் நாட்டினார். கடந்த 2009ம் ஆண்டில் 2வது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு மன்மோகன் சிங், சோனியா காந்தி அடிக்கல் நாட்டினர். இந்த அலுவலகம் கட்டுமான பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த புதிய அலுவலகத்துக்கு ‛இந்திரா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்த பெயர் என்பது காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இந்த அலுவலகத்தின் சிறப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது
2 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளம் + 5 மாடிகளை கொண்டதாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் முதல் தளம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். தற்போது டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இந்த நடைமுறை உள்ளது. அதை அப்படியே காங்கிரஸ் கட்சி பின்பற்ற உள்ளது. மேலும் இப்போது திறக்கப்படும் காங்கிரஸ் அலுவலகம் என்பது பாஜகவின் தலைமை அலுவலகத்தில் இருந்து சிறிது தூரத்தில் தான் உள்ளது.
ஒரே நேரத்தில் சுமார் 400 தலைவர்கள் பங்கேற்கும் கூட்ட அரங்கம் உள்ளது. 5வது மாடியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு தனித்தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் பரந்து விரிந்துள்ளது. அதேபோல் அவர்களின் செயலாளர்களுக்கு அறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள், தலைவர்களின் போட்டோக்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட காங்கிரஸ் தலைமையகம் இன்று முதல் டெல்லி கோட்லா சாலையில் செயல்பட உள்ளது.












Click it and Unblock the Notifications