"ஒரு நபருக்கு ரூ.10,000.." பாஜக வென்றது இப்படி தான்.. பீகார் தேர்தல் குறித்து காங்கிரஸ் பரபர தகவல்
டெல்லி: பீகார் மாநிலத்தில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரம் இந்த வெற்றிக்குக் காங்கிரஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. குறிப்பாக அரசுத் திட்டம் என்ற பெயரில் தேர்தல் நடக்கும் போதே ரூ.1000 விநியோகம் செய்யப்பட்டது என்றும் இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை இப்போது நடந்து வருகிறது. இதில் பாஜக கிட்டத்தட்ட மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது உறுதியாகவிட்டது. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ள நிலையில், அங்குக் கிட்டத்தட்ட 200 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.

காங்கிரஸ்
இதற்கிடையே பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. தேர்தல் நடக்கும்போது பெண்களுக்கு 10,000 ரூபாய் விநியோகிக்கப்பட்டது என்றும் அப்போது தேர்தல் ஆணையம் அமைதியாக அதை வெடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் சாடினார். இதுவும் ஒரு வகையில் வாக்கு திருட்டு தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பீகாரின் காங்கிரஸ் தேர்தல் பார்வையாளரான கெலாட் மேலும் கூறுகையில், "தேர்தல் ஆணையம் ஊமையாக இருந்தது. தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது 10,000 ரூபாய் விநியோகிக்கப்பட்டதை ஏன் தடுக்கவில்லை? நாங்கள் அப்போதே இதை எதிர்த்தோம். ஆனாலும், தேர்தல் ஆணஐயம் அதைத் தடுக்கவில்லை. ராகுல் காந்தி வாக்கு திருட்டு பற்றி பேசுகிறார். வாக்கு திருட்டு என்பது இதுதான்" என்று குறிப்பிட்டார்.
தேர்தல் நடக்கும்போதே ரூ.10,000
பீகாரில் இரண்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது, முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் பயனாளிகளுக்கு 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. தேர்தல் நடக்கும்போது இதுபோல நேரடியாகப் பணம் விநியோகிக்கப்படுவது தவறு என்றே காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த காலங்களில் இதேபோன்ற சூழ்நிலைகளில் தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் எடுத்த நிலைப்பாட்டிற்கு இது முற்றிலும் முரணானதாகும்.
முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது பெண்களுக்காக உருவாக்கப்பட்ட நிதியுதவி திட்டமாகும். இதைப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி வைத்தார். அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்பு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. பீகார் தேர்தல் நடக்கும்போதே பல்வேறு கட்டங்களாகச் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது.
எதிர்ப்பு
இருப்பினும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது என்று அவர்கள் வாதிட்டனர். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பே இது தொடங்கப்பட்டதால் இது ஏற்கனவே இருக்கும் திட்டம் எனச் சொல்லி தடை விதிக்க மறுத்துவிட்டது.
அதேநேரம் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் இரண்டு முறை நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுத்திருந்தது. அதில் ஒன்று விவசாயிகளுக்கானது, மற்றொன்று கலர் டிவி விநியோகிப்பது தொடர்பானதாகும். இரண்டுமே தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே செயல்படுத்தப்பட்டு வந்தபோதிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது..
காங்கிரஸ் சொல்வது என்ன
இதைத் தான் காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது தேர்தல் விதிகள் என்றால் அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ஏற்கனவே இருக்கும் திட்டம் என்றாலும் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பீகாரிலும் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications